கோவை : கோவையில் இரண்டாவது ஆண்டாக நடைபெறும் இன்றைய ஜல்லிக்கட்டு போட்டியில், 750 -க்கும் மேற்பட்ட காளைகள், 500 -க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றனர்.
கோவை : கோவையில் இரண்டாவது ஆண்டாக நடைபெறும் இன்றைய ஜல்லிக்கட்டு போட்டியில், 750 -க்கும் மேற்பட்ட காளைகள், 500 -க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றனர்.

கோவை மாவட்ட நிர்வாகம் மற்றும் கோவை மாவட்ட ஜல்லிக்கட்டு சங்கம் சார்பில், கோவை செட்டிப்பாளையம் எல் அண்ட் டி பைபாஸ் ரோடு பகுதியில் ஜல்லிக்கட்டு போட்டி காலை 8 மணி அளவில் தொடங்கியது. இதை தமிழக உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தொடங்கி வைத்தார்.
இதில், மாவட்ட ஆட்சியர் (பொறுப்பு) துரை ரவிசந்திரன் தலைமை வகித்தார். உடன் தலைவர், தமிழ்நாடு ஜல்லிக்கட்டு சங்கம், ராஜசேகர், சட்டப்பேரவை துணை தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன், மாநகராட்சி துணை ஆணையாளர் காந்திமதி, சட்டப்பேரவை உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள்,அரசு அதிகாரிகள் ஆகியோர் இருந்தனர்.
ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கும் முன் காஷ்மீர் மாநிலம் புல்வாமா இடத்தில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த சி.ஆர்.பி.எப் வீரர்களுக்கு 1 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. அதன் பின் ஜல்லிக்கட்டு உறுதி மொழி ஏற்றக்கப்பட்டது.


இவ்விழாவில், அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசுகையில், "1978 ஆம் ஆண்டு கோவை மாவட்டத்தில் முதல் முறையாக வ.ஊசி. பூங்காவில் ஜல்லிக்கட்டு நடைபெற்றது. அதன் பின் கடந்த ஆண்டு தான் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து, இந்தாண்டும் நடைபெறுகிறது. கடந்த ஆண்டு 450 காளைகள் பங்கேற்ற நிலையில் இந்தாண்டு 2 மடங்காக 750 காளைகள் பங்கேற்றுள்ளன." என்றார்.
ஜல்லிக்கட்டு போட்டிற்காக 30 ஏக்கர் நிலம் சீரமைக்கப்பட்டு, 25000 பேர் வரை அமர்ந்து பார்க்கும் அளவிற்கு கேலரி அமைக்கப்பட்டுள்ளது. மேலும், சிறப்பு அழைப்பாளர்களுக்கு தனி இடவசதி செய்யப்பட்டிருந்தது. சுமார் 40 ஆயிரம் பார்வையாளர்கள் ஜல்லிக்கட்டு போட்டியை கண்டுகளித்தனர்.
இந்த போட்டியில் மதுரை, அலங்காநல்லூர், அவனியாபுரம், பாலமேடு உள்ளிட்ட பகுதிகளை சார்ந்த 750 -க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்க, 500 -க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொண்டு காளைகளை அடங்கினார்கள்.

மேலும், போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு கார், பைக், தங்க நாணயம், வீட்டு உபயோக பொருட்கள் ஆகியவை பரிசாக வழங்கப்படன. ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்து கொண்ட மற்றும் வெற்றி பெற்ற காளைகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.
