கோவை : கோவையைச் சேர்ந்த பல்வேறு தன்னார்வ அமைப்புகள் சார்பில் காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதலில் உயிரிழந்த ராணுவத்தினருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு, ரேஸ் கோர்ஸ் பகுதியில் இன்று நடைபெற்றது.
கோவை : கோவையைச் சேர்ந்த பல்வேறு தன்னார்வ அமைப்புகள் சார்பில் காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதலில் உயிரிழந்த ராணுவத்தினருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு, ரேஸ் கோர்ஸ் பகுதியில் இன்று நடைபெற்றது.

காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில், நேற்று முன்தினம் துணை ராணுவ வீரர்கள் பயணம் செய்த வாகனங்களை குறிவைத்து, பாகிஸ்தானின் ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பினர், வெடிகுண்டுகள் நிரப்பிய காரை மோதி வெடிக்கச்செய்து கொடிய தாக்குதல் நடத்தினர்.
நாட்டையே உலுக்கி உள்ள இந்த தாக்குதலில் 40 துணை ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். இதில் இருவர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். இந்த தாக்குதல் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், பல்வேறு இடங்களில் பொதுமக்கள் ஒன்றுகூடி உயிர்நீத்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

கோவை பேரூர் ஆதீனம், சிரவை ஆதீனம் கௌமார மடாலயம், யுனிவர்சல் பிரதர்குட் அசோசியேஷன், சிறுதுளி, ஆர்.ஏ.ஏ.சி, கோவை மாவட்ட ஐக்கிய ஜமாத், தமிழ்நாடு கத்தோலிக்க சபை, டி.ஏ.எஸ்.கே, ஜமாத்-ஈ-இஸ்லாமி ஹிந்த் உள்ளிட்ட பல்வேறு தன்னார்வ அமைப்புகள் சார்பில் கோவை ரேஸ் கோர்ஸ் பகுதியில் கண்ணீர் அஞ்சலி நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்நிகழ்வில் வீரமரணமடைந்த ராணுவ வீரர்களுக்கு, அனைத்து மதத்தினர் சார்பிலும் பிரார்த்தனை செய்யப்பட்டு, மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த நிகழ்வில், வெள்ளலூர் ஆர்.ஏ.எஃப் படையின் செகண்டட் கமாண்டெண்ட் சதீஷ் கே டூபே (Sathish K Dubby, Secondant Commandant, RAF- Vellalore), சிறுதுளி அமைப்பின் அறங்காவலர், வனிதா மோகன் விவசாயிகள் சங்கத்தினர், சி.ஆர்.பி.எஃப் வீரர்கள், கல்லூரி மாணவர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு மெழுகுவர்த்தி ஏற்றிவைத்து வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.
