கோவை : பொருளாதார குற்றங்கள் மற்றும் அதனுடைய பரிணாமங்கள் குறித்த தேசிய அளவிலான இரண்டு நாட்கள் கருத்தரங்கம், தமிழ்நாடு மாநில நீதித்துறை அகாடெமியின் மண்டல மையத்தில் நடைபெறுகிறது.
கோவை : பொருளாதார குற்றங்கள் மற்றும் அதனுடைய பரிணாமங்கள் குறித்த தேசிய அளவிலான இரண்டு நாட்கள் கருத்தரங்கம், தமிழ்நாடு மாநில நீதித்துறை அகாடெமியின் மண்டல மையத்தில் நடைபெறுகிறது.
கோவை ரேஸ் கோர்ஸ் பகுதியில் உள்ள தமிழ்நாடு மாநில நீதித்துறை அகாடெமியின் மண்டல மையத்தில், பொருளாதார குற்றங்கள் : அதன் பரிமாணங்கள் மற்றும் இயக்கம் குறித்த தேசிய அளவிலான இரண்டு நாட்கள் கருத்தரங்கம் நடைபெறுகிறது. முதல் நாளான இன்று கருத்தரங்க தொடக்க விழாவில், உச்ச நீதிமன்ற நீதிபதி இந்திரா பானர்ஜி, உயர் நீதிமன்ற மதுரை கிளை தலைமை நீதிபதி விஜயா கமலேஷ் தஹில்ரமணி ஆகியோர் பங்கேற்றனர்.
அப்போது, உச்ச நீதிமன்ற நீதிபதி இந்திரா பானர்ஜி பேசியதாவது :- ஒப்பந்தம், உரிமம் பெறுவதற்கு அரசு அதிகாரிகளைத் தவறாக பயன்படுத்துவது, அரசு இட ஆக்கிரமிப்புகள், பங்குச்சந்தை மோசடி, கள்ளச்சந்தை , கடத்தல், கலப்படம், கொள்ளை, நில அபகரிப்பு, போதைப்பொருள் கடத்தல், காப்பீடு மோசடி, மக்களின் பணத்தை தவறாகப் பயன்படுத்துவது உள்ளிட்டவைகள் சமூக பொருளாதார குற்றங்களாக உருவெடுத்துள்ளது. அதிகாரத்தில் இருப்பவர்களால் செய்யப்படும் வெள்ளை காலர் குற்றங்கள் (White collar crimes ) உள்ளிட்டவையும் பொருளாதார குற்றங்களில் உள்ளடங்கும்.
இதுவரை பொருளாதார குற்றங்கள் வரையறுக்கப்படவில்லை. ஆனாலும், கடந்த 2014ல் தேசிய குற்ற ஆவணக் காப்பகம், 24 வகையான பொருளாதார குற்றங்களைக் குறிப்பிட்டதில், வரி ஏய்ப்பு முதன்மையாக உள்ளது. கணினி மற்றும் அதன் தொழில்நுட்பங்களை மட்டுமே வைத்துக்கொண்டு பொருளாதார குற்றங்களில் எளிதாக ஈடுபடுவதால், பொருளாதார வழக்குகளை விரைந்து முடிக்கவும், வழக்கு சாட்சியங்களை ஆராயவும் தொழில்நுட்பங்கள் பரிணாமம் குறித்து நீதிபதிகள் தங்களது அறிவை மேம்படுத்திக்கொள்ள வேண்டும், என்றார்.
முன்னதாக, உயர் நீதிமன்ற மதுரை கிளை தலைமை நீதிபதி விஜயா கமலேஷ் தஹில்ரமணி கூறியதாவது :- குற்றங்களில் பொருளாதார குற்றங்கள் மிகவும் அபாயகரமானது. இவை தனி நபரை மட்டுமின்றி சமுதாயம், நாட்டின் பொருளாதாரத்தை பாதிக்கும். பொருளாதார குற்றங்கள் நாட்டின் பாதுகாப்பிற்கு எதிராகப் பதுங்கி வாழும் குற்றவாளிகள், சட்டவிரோத பொருட்களை வர்த்தகம் செய்யவும், பணம் பெறவும் வழிவகுக்கிறது. தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, புதிது புதிதாக பொருளாதார குற்றங்களில் ஈடுபடுவர்களை எதிர்கொள்ள இந்த 2 நாட்கள் கருத்தரங்கம் மிகவும் உதவும். இவ்வாறு அவர் பேசினார்.
மேலும், இந்த இரண்டு நாட்கள் கருத்தரங்கில் நாடு முழுவதிலுமிருந்து 100க்கும் மேற்பட்ட நீதிபதிகள் பங்கேற்றுள்ளனர்.