கோவை : கோவை-திருச்சி சாலையில் மதுபோதையில் லாரி ஓட்டி வந்த நபர், அடுத்தடுத்து ஏற்படுத்திய விபத்தில் மூன்று பேர் பலியாகியுள்ளனர்.
கோவை : கோவை-திருச்சி சாலையில் மதுபோதையில் லாரி ஓட்டி வந்த நபர், அடுத்தடுத்து ஏற்படுத்திய விபத்தில் மூன்று பேர் பலியாகியுள்ளனர்.
கோவை மாவட்டம், பாப்பம்பட்டியில் பகுதியில் இருந்து ராஜஸ்தான் மாநிலத்தில் பதிவு செய்யப்பட்ட கண்டெய்னர் லாரி ஒன்று திருச்சி சாலை நோக்கி அதிவேகமாக வந்தது. இந்த லாரியானது சாலையோரம் நடந்து சென்ற பாதசாரி மீது மோதியது. அதனைத் தொடர்ந்து, அவ்வழியாக சென்ற இருசக்கர வாகனம் மற்றும் இன்னும் சில வாகனங்களின் மீது உரசியவாறு சென்றது.
இந்த விபத்தில், இரண்டு சக்கர வாகனத்தில் வந்தவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து, விபத்தை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற லாரியை பார்த்த பொதுமக்கள் விரட்டிச் சென்றனர். ஆனாலும், விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுநர் நிறுத்தாமல் வேகமாக ஓட்டிச் சென்றார். மேலும், ராவத்தூர் பிரிவு அருகே வந்த போது, எதிரே வந்த கார் மீது லாரி மோதியது. இதனால், காரில் வந்தவர்கள் படுகாயமடைந்தனர்.

இந்நிலையில், நிற்காமல் சென்ற லாரி, குமரன் கோட்டம் அருகே சரக்கு வாகனத்தின் மீது மோதியது. இதில், சரக்கு வாகனத்தில் வந்த ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அடுத்தடுத்து விபத்து ஏற்படுத்திய பின்னர், லாரி அங்குள்ள சாலையோரம் இருந்த புளியமரத்தின் மீது மோதி நின்றது. இதையடுத்து, லாரியில் இருந்த ஓட்டுநரை துரத்திச் சென்ற பொதுமக்கள் சரமாரியாக தாக்கினர். தற்போது, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாகத் தகவல் அறிந்த சூலூர் போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டனர்.
இந்த தொடர் விபத்தில், குமரன் கோட்டம் அருகே அழகிரியின் மகன் பூபதியும், பாப்பம்பட்டி பிரிவு அருகே பேச்சியண்ணன் மகன் ராஜேஷ்கண்ணாவும் (35), காங்கேயம்பாளையம் ஆர்.டி.ஓ ஆபீஸ் அருகில் நடந்த விபத்தில் முத்துசாமி மகன் சீரங்கசாமி (52), என மொத்தம் மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். அதேபோலவே, இந்த விபத்தில் 6 -க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இதையடுத்து, அவர்கள் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். விசாரணையில், லாரி ஓட்டுநர் பாட்னாவை சேர்ந்த பிரேம்ஜி சிங் எனக் கூறப்படுகிறது.
மருத்துவமனையில் லாரி ஓட்டுநர் அட்டகாசம் :
மது போதையில் 3 உயிரை பலியாக்கிய லாரி ஒட்டுநர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து, அவர் மருத்துவமனைக்குள் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்தார். மேலும், அதிதீவிர சிகிச்சைப் பிரிவான "ரெட் ஜோனில்" அனுமதிக்கப்பட்ட லாரி ஓட்டுநர் அருகே உள்ள நோயாளிகளுக்குத் தொல்லை கொடுக்கும் வகையில் செயல்பட்டார்.

இந்நிலையில், மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் அமைதி காக்க வலியுறுத்தினர். ஆனாலும், அவர் கேட்டபாடில்லை. இதையடுத்து, அவரை வேறு பகுதிக்கு மாற்ற மருத்துவமனையின் பாதுகாவலர்கள் அழைத்துச் சென்றனர். அப்போதும் அவர் மருத்துவமனை பாதுகாவலர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதில், லாரி ஓட்டுனர் ஹிந்தி மொழியில், "என்னை யாரும் ஒன்றும் செய்ய முடியாது, நான் நீதிமன்றம் சென்று விடுதலை பெறுவேன். எனது முதலாளி என்னை எங்கு சென்றாலும் விடுவிப்பார்." எனத் தெரிவித்தார்.
இதைக் கேட்ட பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் லாரி ஓட்டுநரை தாக்க முற்பட்டனர். ஆனால், லாரி ஓட்டுநர் தொடர்ந்து மருத்துவமனைக்குள் சத்தமிட்டபடி அடாவடித்தனம் செய்து வந்தார். பலரின் உயிரை அழித்துவிட்டு, மருத்துவமனைக்குள் வந்து நோயாளிகளுக்கும் தொல்லை கொடுத்து வந்த இவரின் செயலால் அங்கிருந்தோர் ஆத்திரமடைந்தனர். இதையடுத்து, தகவலறிந்து வந்த பந்தய சாலை போலீசார் ஓட்டுநரைப் பாதுகாப்பாக மருத்துவமனைக்கு அனுப்பினர்.
இதுகுறித்து சூலூர் சுற்றுவட்டாரப் பகுதி மக்கள் கூறியதாவது :- திருச்சி சாலையான சூலூர் பகுதியில் அடிக்கடி வாகன விபத்துக்கள் ஏற்படுகிறது. மேலும், இந்த சாலையில் லாரி ஓட்டுநர்களும், பேருந்து ஓட்டுநர்களும் போட்டி போட்டுக்கொண்டு தங்களின் வாகனம் ஓட்டும் திறமையை காட்டி வருகின்றனர். இதனால், உயிரிழப்புகள் அதிகம் ஏற்படுகிறது. அதேபோலவே, காவல்துறையினர் இருசக்கர வாகனங்கள் மீது காட்டும் ஆர்வம் ஏன் அதிவேகமாக ஓட்டும் பேருந்துகள், லாரியின் மீது காட்டுவதில்லை என பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இரவு நேரங்களில் அதிகபட்சமாக பேருந்து ஓட்டுநர்களும், லாரி ஓட்டுநர்களும் மது போதையில் தான் வருகின்றனர். இதில், வெளிமாநில லாரி ஓட்டுநர்கள் தள்ளாடியபடியே வாகனத்தை இயக்கிச் செல்கின்றனர். இவர்கள் இந்த மாதிரி வாகனங்களை இயக்குவதால், பெரும் விபத்துக்கள் நேரிடுகிறது. நேற்று நடந்த விபத்து கூட மதுபோதையில் வாகனத்தை ஓட்டியதால் நடந்ததே.
அடுத்தடுத்து 3 விபத்துகளை நடத்தி, 3 பேர் உயிரைப் பலியாக்கிய ஓட்டுநர் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், தினமும்இரவு நேரங்களில் லாரி ஓட்டுநர்கள் மற்றும் பேருந்து ஓட்டுநர்கள் மதுபோதையில் உள்ளனரா என்பதைக் காவல்துறையினர் கட்டாயம் சோதனை செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.
மேலும், இது எங்கள் பகுதியில் பெரும் சோகம் மற்றும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆகவே, இனி இதுபோன்ற சம்பவம் நடக்காமல் இருக்கக் காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தனர்.