திருப்பூர் : உடுமலையில் வனத்துறையினரால் பிடிக்கப்பட்ட சின்னத்தம்பி, நீண்ட போராட்டத்திற்கு பிறகு லாரியில் ஏற்றப்பட்டு பொள்ளாச்சி வரகலியாறு முகாமிற்கு கொண்டு செல்லப்படுகிறது.
திருப்பூர் : உடுமலையில் வனத்துறையினரால் பிடிக்கப்பட்ட சின்னத்தம்பி, நீண்ட போராட்டத்திற்கு பிறகு லாரியில் ஏற்றப்பட்டு பொள்ளாச்சி வரகலியாறு முகாமிற்கு கொண்டு செல்லப்படுகிறது.

சென்னை உயர்நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி, திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் தாலுகா கண்ணாடிப்புத்தூர் பகுதியில் உள்ள கரும்பு காட்டில் முகாமிட்டுள்ள சின்னத்தம்பியை இடமாற்றம் செய்யும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். இன்று அதிகாலை, கரும்பு காட்டிற்குள் முகாமிட்டிருந்த சின்னத்தம்பியை டிரான் மற்றும் கும்கி யானைகள் கலீம் மற்றும் சுயம்பு ஆகியவற்றின் மூலம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டது.
பின்னர், சின்னத்தம்பிக்கு மயக்க ஊசி செலுத்தும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால், 4 முறை மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியில் முடிந்தன. இதையடுத்து, வனத்துறையினர், கால்நடை மருத்துவர் அசோகனின் உதவியுடம் 5-வது முயற்சியில் சின்னத்தம்பியின் வலது தொடைப் பகுதியில் மயக்க ஊசியை செலுத்தினர்.
இருப்பினும், மயக்கமடையாத சின்னத்தம்பி விவசாய நிலங்களில் புகுந்தது. பின்னர், கும்கி யானைகளைப் பயன்படுத்தி தொடர்ந்து சின்னத்தம்பியை கண்காணித்து வந்தனர். இதையடுத்து, ஒருவழியாக, மயக்கமடைந்த சின்னத்தம்பியை வாழைத்தோட்டத்திற்குள் வைத்து மடக்கிப் பிடித்தனர். பின்னர், சின்னத்தம்பியின் கழுத்தில் கட்டப்பட்டிருந்த ரேடியோ காலர் எனப்படும் ஜி.பி.எஸ். கருவியை அகற்றினர்.
கடந்த முறை தடாகம் பகுதியில் பிடித்து லாரியில் ஏற்றும் போது, சின்னத்தம்பிக்கு மனதளவிலும், உடலளவிலும் பலத்த காயம் ஏற்பட்டன. இதனை தடுக்கும் விதமாக, காட்டு யானை சின்னத்தம்பியை பிடித்து வனத்துறையினர் கட்டுப்பாட்டில் வைக்க உத்தரவிட்டிருந்த சென்னை உயர்நீதிமன்றம், சின்னத்தம்பியை பிடிக்கும் போது, அவனுக்கு எந்தக் காயமும் ஏற்படக் கூடாது என எச்சரிக்கை விடுத்திருந்தது.
இதனிடையே, கேரள மாநிலத்தில் யானைகளைப் பிடித்து வாகனத்தில் ஏற்றுவதற்கு எளிதாக, ஹைட்ராலிக் வசதி கொண்ட லாரிகள் தயார் செய்யப்பட்டன. எனவே, எந்தவிதமான காயமும் இன்றி சின்னத்தம்பியை ஏற்றி, ஆனைமலைக் கொண்டு செல்வதற்காக, கேரளாவில் இருந்து ஹைட்ராலிக் வசதி கொண்ட சிறப்பு லாரி உடுமலைக்கு வரவழைக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து, வாழைத்தோட்டத்திற்கு நடுவே இருந்த சின்னத்தம்பி, நீண்ட போராட்டத்திற்கு பிறகு லாரியில் ஏற்றப்பட்டான். கும்கி யானை சுயம்பு பின்னிருந்து தள்ள, சின்னத்தம்பி ஹைட்ராலிக் முறைப்படி லாரியில் ஏற்றப்பட்டது. பின்னர், அங்கிருந்து ஆனைமலை புலிகள் வனக் காப்பகத்திற்குட்பட்ட வரகலியாறு யானைகள் முகாமிற்கு அழைத்துச் செல்லப்படுகிறது.
அங்கு சின்னத்தம்பியை ஆனைமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட வரகலியாறு யானைகள் முகாமில் உள்ள கூண்டில் வைத்து 2 மாதங்கள் பயிற்சி அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பின்னர், அவனை நிரந்தரமாக முகாமில் வைக்கலாமா..? அல்லது காட்டுக்கு அனுப்பலாமா..? என வனத்துறையினர் முடிவு செய்ய இருக்கின்றனர்.