திருப்பூர் : உடுமலையில் சுற்றித் திரியும் காட்டு யானை சின்னத்தம்பியை பிடித்து கூண்டில் அடைத்து பயிற்சி அளிக்க முடிவு செய்திருப்பதாக ஆனைமலை புலிகள் காப்பகத்தின் களஇயக்குநர் வி. கணேசன் தெரிவித்துள்ளார்.
திருப்பூர் : உடுமலையில் சுற்றித் திரியும் காட்டு யானை சின்னத்தம்பியை பிடித்து கூண்டில் அடைத்து பயிற்சி அளிக்க முடிவு செய்திருப்பதாக ஆனைமலை புலிகள் காப்பகத்தின் களஇயக்குநர் வி. கணேசன் தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்டம் தடாகத்தில் இருந்து பிடித்துச் செல்லப்பட்டு டாப் ஸ்லிப்பில் விடப்பட்ட காட்டு யானை சின்னத்தம்பி, கடந்த 13 நாட்களாக திண்டுக்கல் மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் உலா வருகிறது. கிருஷ்ணாபுரம் வாய்க்கால் பாலம் பகுதியில் இருந்த சின்னத்தம்பி யானை, அங்கிருந்து மீண்டும் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் தாலுகா கண்ணாடிப்புத்தூர் பகுதியில் கரும்பு காட்டில் முகாமிட்டுள்ளது.

இதனிடையே, காட்டு யானை சின்னதம்பியை பிடித்து, தற்போதைக்கு வனத்துறையினர் கட்டுப்பாட்டில் வைக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், சின்னதம்பியை பிடிக்கும் போது, அவனுக்கு எந்த காயமும் ஏற்படக் கூடாது என்றும், சின்னதம்பி வனத்துறை கட்டுப்பாட்டுக்கு வந்த பின்னர், அவனை நிரந்தரமாக முகாமில் வைக்கலாமா..? அல்லது காட்டுக்கு அனுப்பலாமா..? என பின்னர் முடிவு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், சின்னத்தம்பி உலா வருவதை நேரில் ஆய்வு செய்த சின்னத்தம்பியை பிடித்து கூண்டில் அடைத்து பயிற்சி அளிக்க முடிவு செய்திருப்பதாக ஆனைமலை புலிகள் காப்பகத்தின் களஇயக்குநர் வி. கணேசன் தெரிவித்துள்ளார்.
மேலும், சின்னத்தம்பியின் நடமாட்டத்தை நேரில் ஆய்வு செய்த திருப்பூர் மாவட்ட வன அதிகாரி திலீப் குமார் கூறுகையில், "சின்னத்தம்பியை ஆனைமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட வரகலியாறு யானைகள் முகாமில் உள்ள கூண்டில் வைத்து 2 மாதங்கள் பயிற்சி அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது, சின்னத்தம்பியை பிடிக்க கும்கி யானைகள் கலீம் மற்றும் சுயம்பு ஆகியவை தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளன. தேவைப்பட்டால், மேலும், சில கும்கி யானைகள் வரவழைக்கப்படும்.
மருத்துவக் குழு விரைவில் இங்கு வந்து சேர உள்ளனர். இன்றிரவிற்குள் அனைத்து நடவடிக்கைகளும் தயார்படுத்தப்படும். சரியான தருணத்தில் சின்னத்தம்பியை பிடிக்கும் பணி தொடங்கப்படும். மேலும், சின்னத்தம்பியால் இழப்பு ஏற்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். உடுமலையில் இருந்து பாதுகாப்பான முறையில் சின்னத்தம்பி இடமாற்றம் செய்யப்படுவான்," என்றார்.
தற்போது, திருப்பூர் மாவட்டம் கண்ணாடிப்புத்தூர் பகுதியில் முகாமிட்டுள்ள சின்னத்தம்பியை திருப்பூர், கோவை, பொள்ளாச்சி மற்றும் பழனி மண்டலங்களுக்குட்பட்ட வனத்துறை அதிகாரிகள் மற்றும் ஆனைமலை புலிகள் காப்பகத்தின் ஊழியர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.