கூடலூரில் மாவட்ட ஆட்சியர் கூட்டத்தை அரசியல் கட்சியினர் புறக்கணிப்பு : கூட்டம் பாதியில் முடித்து வைப்பு

நீலகிரி : கூடலூரில் பிரிவு 17 நிலப்பிரச்சினை தொடர்பாக நீலகிரி மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற விளக்கக் கூட்டத்தை அரசியல் கட்சியினர் புறக்கணித்து வெளியேறியதால், கூட்டம் பாதியில் முடிந்தது.

நீலகிரி : கூடலூரில் பிரிவு 17 நிலப்பிரச்சினை தொடர்பாக நீலகிரி மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற விளக்கக் கூட்டத்தை அரசியல் கட்சியினர் புறக்கணித்து வெளியேறியதால், கூட்டம் பாதியில் முடிந்தது.

நீலகிரி மாவட்டம் கூடலூர் பந்தலூர் தாலுகா பகுதிகளில் விவசாயிகள், பொதுமக்கள் வசிக்கும் பிரிவு 17 நிலப்பிரச்சினை தொடர்பாக, மாவட்ட நிர்வாகம் எடுத்து வரும் நடவடிக்கைகளில் எழுந்துள்ள பல்வேறு சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கும் விளக்கக் கூட்டம் கூடலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. 

மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில், அனைத்து அரசியல் கட்சியின் உறுப்பினர்கள், பொதுநல அமைப்புகள், அரசு மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். 

கூட்டம் தொடங்கியவுடன் மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா பேசியதாவது :- பிரிவு 17 நிலம் குறித்து அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் பற்றி பல்வேறு அமைப்புகள், வாட்ஸ் அப் குரூப்கள் மூலம் பரப்பப்படும் தவறான தகவல்களால் பொதுமக்கள் மத்தியில் பீதியடைந்துள்ளனர். 

அவ்வாறு தகவல் அளிப்பவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்பதால் தவறான தகவல்களை வெளியிடக்கூடாது, என தெரிவித்தார். 

அப்போது, பிரிவு 17 நிலங்களில் வசிப்பவர்களுக்கு நில வெளியேற்ற நோட்டீஸ் வழங்கப்பட்டது குறித்து கூட்டத்தில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. கூட்டத்தைக் கட்டுப்படுத்த போலீசார் எடுத்த முயற்சி பலன் தராத நிலையில், அரசியல் கட்சியினர் கூட்டத்தில் இருந்து வெளியேறினர். இதனால், கூட்டம் பாதியில் முடித்து வைக்கப்பட்டது. 

இதனிடையே, மாவட்ட ஆட்சியரே தங்களை விளக்கக் கூட்டத்திற்கு அழைத்து விட்டு, அவமதிக்கும் வகையிலும், மிரட்டும் வகையிலும் நடந்து கொண்டதாகவும், பொதுமக்களின் பிரச்சினை குறித்து உரிய விளக்கம் தர மறுப்பதாக அனைத்து கட்சியினர் சார்பில் தெரிவிக்கப்பட்டது. 

1969-ம் ஆண்டு ஜமீன் ஒழிப்பு சட்டத்தின் கீழ் அரசுடைமையாக்கப்பட்ட 80,000 ஏக்கர் நிலத்தில், தீர்வு செய்யப்படாத 36,000 ஏக்கரில் தனியார் பெருந்தோட்டங்கள் மற்றும் சிறு, குறு விவசாயிகளின் விவசாய நிலங்கள் மற்றும் கிராமங்கள் உள்ளன. 

30,000-க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கும் இந்த நிலங்கள் பிரிவு 17 என்ற சட்டத்தின் கீழ் வகைப்படுத்தப்படாத நிலமாக அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. இங்கு வசிக்கும் விவசாயிகளின் விவசாய நிலங்கள், குடியிருப்புகளுக்கு பட்டா வழங்கக் கோரியும், மின் இணைப்பு இல்லாத சுமார் 10,000 வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்கக் கோரியும் கடந்த பல வருடங்களாக அரசியல் கட்சிகள் மற்றும் பொதுநல அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன. 

இந்த நிலையில், கடந்த சட்டமன்ற கூட்டத்தில் தமிழக அரசு சார்பில் பிரிவு 16 A என்ற புதிய சட்டத்தின் மூலம் அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பிரிவு 17 நிலங்களை நேரடியாக எந்த விசாரணையும் இன்றி, பாதுகாக்கப்பட்ட வனமாக அறிவிக்க ஒப்புதல் கோரி சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

இந்த தீர்மானம், ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பியுள்ளதால், இந்த நிலங்களில் வசிக்கும் மக்களிடையே தங்களை அரசு நில வெளியேற்றம் செய்யலாம் என்ற அச்சம் நிலவுகிறது. எனவே, அரசியல் கட்சிகள் மற்றும் பொதுநல அமைப்புகள் சார்பில் மீண்டும் போராட்டங்கள் நடத்தும் சூழல் உருவாகியுள்ளது. இது தொடர்பாக, அரசியல் கட்சிகள் இடையே விளக்கம் அளிக்கவும், பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை போக்கவும் நடத்தப்பட்ட கூட்டம் குழப்பத்தில் பாதியில் முடிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. 



பின்னர், இது குறித்து மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா பத்திரிகையாளர்களிடம் அளித்த பேட்டியில் கூறியதாவது :- கடந்த 50 ஆண்டுகளாக நீடித்து வரும் பிரச்சினைக்கு முடிவு காணும் வகையில், சட்டரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. முதற்கட்டமாக, இந்த நிலங்களில் வசிக்கும் ஆதிவாசி குடியிருப்புகளுக்கு சாலை, மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு வருகின்றது. 

வனத்துறைக்கு ஒப்படைக்க வேண்டிய 17,000 ஏக்கர் நிலம் தொடர்பான நடவடிக்கைகள் முடிந்ததும், மற்ற நிலங்கள் குறித்த முடிவுகள் அடுத்தகட்டமாக எடுக்கப்படும். 

கடந்த பல வருடங்களுக்குப் பின்னர், இந்த நிலப் பிரச்சினையை தீர்க்க வேகமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த நிலங்களில் வசிக்கும் யாரையும் வெளியேற்றம் செய்யும் வகையில், எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. 

மாறாக, மக்களின் பிரச்சினைகளை தீர்க்கவே, அரசும், மாவட்ட நிர்வாகமும் ஈடுபட்டு வருகின்றன. எனவே, பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் யாரும் நடந்து கொள்ளக் கூடாது. இது குறித்து இப்பகுதி மக்கள் மத்தியில் அரசு சார்பில் விழிப்புணர்வை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும், என தெரிவித்தார்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...