Exclusive: கோவை அரசு மருத்துவமனை முன்பு அதிகரித்துள்ள தனியார் பேருந்துகளின் அட்டகாசம் : மாற்றுப் பேருந்து நிறுத்தம் அமைத்து தர வலியுறுத்தல்

கோவை : 108 ஆம்புலன்ஸ்களுக்கு தனியார் பேருந்துகள் தொடர்ந்து இடையூறு ஏற்படுத்தி வருவதால், கோவை அரசு மருத்துவமனையின் முன்பு உள்ள பேருந்து நிலையத்தை மாற்றிடத்தில் அமைத்து தரக் கோரி ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


கோவை : 108 ஆம்புலன்ஸ்களுக்கு தனியார் பேருந்துகள் தொடர்ந்து இடையூறு ஏற்படுத்தி வருவதால், கோவை அரசு மருத்துவமனையின் முன்பு உள்ள பேருந்து நிலையத்தை மாற்றிடத்தில் அமைத்து தரக் கோரி ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



கோவை அரசு மருத்துவமனையானது கோவை உட்பட திருப்பூர், ஈரோடு, நீலகிரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் உள்ள மக்கள் பயன்படுத்தும் முக்கிய மருத்துவமனையாக உள்ளது. இந்த மருத்துவமனைக்கு தினமும் சுமார் 7,000 வெளிநோயாளிகளும், 1,600 உள்நோயாளிகளும் வந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். அதேபோல, சாலை விபத்துக்கள் மற்றும் மேல்சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையை நாடும் நபர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உயிருக்கு ஆபத்தான சூழல்களில் வருபவர்கள் அனைவரும், 108 ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர்.

ஆம்புலன்ஸ்களும்..! புகார்களும்..!

தமிழகத்தில் 108 ஆம்புலன்ஸ் சேவை திட்டம் கடந்த 2008 - ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. அன்று முதல் இன்று வரை லட்சக்கணக்கான உயிர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் உரியநேரத்தில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு காப்பாற்றப்பட்டுள்ளனர். குறிப்பாக, கோவை அரசு மருத்துவமனைக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து 108 ஆம்புலன்ஸ்கள் மூலம் நோயாளிகளை மேல் சிகிச்சைக்காக கொண்டு வருகின்றனர்.



இதில், கோவை மாவட்டத்தில் மட்டும் மொத்தம் 37 அவசர சேவை (108) ஆம்புலன்ஸ்கள் இயங்கி வருகின்றன. அவற்றில், 29 பெரிய ஆம்புலன்ஸ்களும், 3 இருசக்கர வாகன ஆம்புலன்ஸ்களும், 3 ஜீப் ஆம்புலன்ஸ்களும், 2-பச்சிளம் குழந்தைகளுக்கான ஆம்புலன்ஸ்களும் உள்ளன. இப்படி இந்த 37 ஆம்புலன்ஸ் சேவைகளும் அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளை உரிய நேரத்திற்கு கொண்டு சென்று உயிர்பலி இன்றி காப்பாற்றி வருகின்றனர். ஆனால், ஒரு சில நேரங்களில் தனியார் பேருந்துகள் இந்த 108 ஆம்புலன்ஸ் சேவைக்கு இடைஞ்சல் கொடுக்கும் வகையில், பேருந்தை இயக்கும் மனிதநேயமற்ற செயல் தொடர்ந்து வருகிறது. 

குறிப்பாக, கோவை அரசு மருத்துவமனையின் நுழைவு வாயில் பகுதியில் தனியார் பேருந்துகள் ஆம்புலன்சுக்கு வழிவிடாமல் இடைஞ்சல் கொடுப்பதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது. மேலும், நோயாளிகளுக்கு இடைஞ்சல் ஏற்படுத்தும் விதமாக செயல்படும் தனியார் பேருந்துகள் மீது தொடர் புகார்கள் எழுந்தால் கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என கோவை அரசு மருத்துவமனை நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

இது குறித்து கோவை அரசு மருத்துவமனையின் இருப்பிட மருத்துவ அலுவலர் சவுந்திரவேல் கூறும்போது :- ஒரு சில தனியார் பேருந்துகள் நோயாளிகளுக்கு இடைஞ்சல் ஏற்படுத்தும் வகையில் செயல்படுகின்றனர். அதேபோல, ஆம்புலன்ஸ்களுக்கு வழிவிடாமல் வாகனத்தை நிறுத்துவதும், மருத்துவமனை ஊழியர்கள் சொல்லியும், நகர மறுப்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கைகள் எடுப்போம், என தெரிவித்தார்.

தனியார் பேருந்துகளின் அட்டகாசம்

தனியார் பேருந்துகளை பொறுத்தவரை ஒன்றைவிட ஒன்று அதிவேகமாக சென்று பயணிகளை ஏற்றிக்கொண்டு பணம் சம்பாதிப்பதை மட்டுமே நோக்கமாக கொண்டு செயல்படுகின்றனர். இதுபோன்று பணத்திற்காக அதிவேகமாக வாகனத்தை இயக்கி செல்வதால் பல விபத்துக்கள் நேரிடுவதை இவர்கள் கண்டு கொள்வதில்லை. இப்படி அதிவேகமாக வாகனத்தை இயக்கி விபத்தை ஏற்படுத்தும் பேருந்துகளை பொதுமக்கள் யாராவது மடக்கி, பிடித்து தட்டி கேட்டாலும், அவர்கள் தங்கள் முதலாளியின் அரசியல் பலத்தை பயன்படுத்துகின்றனர்.



இவ்வாறு தனியார் பேருந்து ஓட்டுநர்கள் பேருந்தை தாறுமாறாக ஓட்டுவதுடன், கண்ட இடங்களில் பேருந்துகளை நிறுத்தி பயணிகளை ஏற்றுவது, இறக்குவதும் என போக்குவரத்து விதிகளை மீறி சாலை விபத்துகளுக்கும் வழி வகுக்கின்றனர்.

குறிப்பாக, தனியார் பேருந்துகள் கோவை அரசு மருத்துவமனையின் புதுகேட் அருகே இருக்கும் பேருந்து நிறுத்தத்தில் பேருந்துகளை நிறுத்தாமல் மருத்துவமனையின் நுழைவு வாயிலை அடைத்தபடி பேருந்துகளை நிறுத்துகின்றனர். இதனால், மருத்துவமனை முன்பு நோயாளிகளுக்கு சிரமம் ஏற்படுகிறது. அதேபோல, 108 ஆம்புலன்ஸ் மருத்துவமனை முன்பு வளைந்து நுழைவு வாயிலில் புகுந்து அவசர சிகிச்சை பிரிவிற்கு நோயாளியைக் கொண்டு செல்வதற்கு சுமார் 10 நிமிடத்திற்கு மேல் காலதாமதம் ஆகிறது. இதற்கு காரணம் தனியார் பேருந்துகளும், அரசு பேருந்துகளும் போட்டி போட்டுக் கொள்வதே ஆகும். இதில், அரசுப் பேருந்துகளை பொருத்தவரை ஆம்புலன்ஸ்களுக்கு வழி விடுவதில் ஓரளவிற்கு விழிப்புணர்வு அடைந்துள்ளனர். ஆனால், தனியார் பேருந்துகள் தங்களின் சுய லாபத்தை தவிர மற்ற எந்த மனிதநேயத்தையும் மதிக்காமல் செயல்படுகின்றனர்.

அதேபோல, மருத்துவமனையின் பாதுகாவலர்கள் ஆம்புலன்சிற்கு வழிவிட விசில் ஊதி பேருந்தை அப்புறப்படுத்தக் கூறினாலும், பேருந்தை அப்புறப்படுத்துவது கிடையாது. மாறாக, மருத்துவமனை பாதுகாவலர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றனர். மேலும், தாங்கள் அப்படித்தான் நிறுத்துவோம், உன்னால் முடிந்ததைப் பார்த்துக் கொள் எனவும் தனியார் பேருந்து ஊழியர்கள் மிரட்டல் விடுக்கின்றனர். இதனால், மருத்துவமனையின் பாதுகாவலர்கள் தனியார் பேருந்துகளை அப்புறப்படுத்த முடியாமல் அவதியுற்று வருகின்றனர். 

ஆகவே, இந்த தனியார் பேருந்துகளின் அட்டகாசத்தை தடுப்பதற்கு, போக்குவரத்து காவல்துறை நிரந்தர தீர்வை ஏற்படுத்த வேண்டும் என மருத்துவமனை ஊழியர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

இதுகுறித்து பொதுமக்களைச் சேர்ந்த ஒருவர் கூறும்போது :- நான் இந்த அரசு பேருந்து மருத்துவமனையின் பேருந்து நிறுத்தத்தைத்தான் அதிகமாக பயன்படுத்தி வருகிறேன். இந்த இடத்தில் தனியார் பேருந்துகள் 108 ஆம்புலன்ஸ் செல்வதற்கு பெரும் இடைஞ்சலை ஏற்படுத்துகின்றனர். இப்படி இடைஞ்சல் ஏற்படுத்தும் பொழுது, பொதுமக்களோ அல்லது மருத்துவமனையை சார்ந்தவர்களோ, யாராவது தட்டி கேட்டால் அவர்களை மிரட்டும் தொனியில் பேசி அடிக்க வருகின்றனர். இதுபோன்ற செயல்பாடுகள் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் உள்ளது. ஆகவே, இந்த அசம்பாவித செயல்களை தடுக்க காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என தெரிவித்தார்

மாற்றுப் பேருந்து நிறுத்தம் அவசியம்

கோவை அரசு மருத்துவமனை பேருந்து நிறுத்தத்தை ரயில் நிலையத்திற்கு வருபவர்கள், தனியார் பள்ளி  மாணவர்கள், அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் மற்றும் நீதிமன்றத்திற்கு வருபவர்கள் என ஆயிரக்கணக்கானோர் பயன்படுத்தி வருகின்றனர். அதேபோல, அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளும், அவர்களின் உறவினர்களும் அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர்.

இவ்வாறு குறுகலான இந்த சாலையில் மக்கள் நடமாட்டம் அதிகமாக இருப்பதால் போக்குவரத்து நெரிசல்களும், விபத்துகளும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே செல்கிறது. ஆகவே, மருத்துவமனையின் புதிய கேட் நுழைவு வாயிலில் உள்ள இந்தப் பேருந்து நிறுத்தத்தை அப்புறப்படுத்தி, மருத்துவமனையின் பழைய கேட்டிற்கு எதிர்புறம் பயன்படுத்தாமல் இருக்கும் நிறுத்தத்தில் நிறுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்களும் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களும் கேட்டுக்கொண்டுள்ளனர்.

இதுகுறித்து 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களின் தொழிற் சங்க மண்டல செயலாளர் சிவசாமி கூறியதாவது :- நாங்கள் நோயாளிகளின் உயிரை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் வாகனத்தை அதிவேகமாக இயக்கி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு வருவோம். ஆனால், இங்கு வந்தால் மருத்துவமனையின் நுழைவு வாயில் அருகே தனியார் பேருந்துகள் வழியை மறித்து நிறுத்தி சிரமத்தை ஏற்படுத்துகின்றனர். இதனால், கோல்டன் ஹவர்ஸ் என சொல்லப்படுகிற உயிர் காக்கும் நேரம் காலதாமதம் ஆகிறது.

ஆகவே, இந்த தனியார் பேருந்துகளால் ஏற்படும் சிக்கலை தடுக்க போக்குவரத்து காவல்துறையினர் இந்தப் பேருந்து நிறுத்தத்தை மாற்றி பழைய கேட் எதிர்புறம் இருக்கும் பேருந்து நிறுத்தத்தில் நிறுத்தத்தை அமைத்துத் தரவேண்டும், என்றார்.

அரசு மருத்துவமனை முன்பு பேருந்துகளை நிறுத்தி ஆம்புலன்சுக்கு வழிவிடாமல் தொடர்ந்து இடைஞ்சல் ஏற்படுத்தி வரும் தனியார் பேருந்துகள் குறித்து ஊடகங்களிலும், மருத்துவமனையின் பாதுகாவலர்கள் மூலமாகவும், நோயாளிகள் மூலமாகவும், பல புகார்கள் வந்தும் தொடர்ந்து தனியார் பேருந்துகளின் அட்டகாசங்கள் ஓயவில்லை. இதனால், மருத்துவமனை ஊழியர்களுக்கும், தனியார் பேருந்துகளுக்கும் வாக்குவாதம் மட்டுமே மிஞ்சுகிறது. ஆகவே, இந்த பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண மாற்றுப் பேருந்து நிறுத்தம் தேவை என பொதுமக்களும்,108 ஆம்புலன்ஸ் ஊழியர்களும், சமூக ஆர்வலர்களும் மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறையினரிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...