வேலூர் : வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பெண் வழக்கறிஞர் சினேகா, இந்தியாவிலேயே முதன்முறையாக ‘சாதி மற்றும் மதம் அற்றவர்’ என அரசு சான்றிதழ் பெற்று, சாதியவாதிகள் அனைவரையும் தன் பக்கம் திரும்பிப் பார்க்கச் செய்துள்ளார்.
வேலூர் : வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பெண் வழக்கறிஞர் சினேகா, இந்தியாவிலேயே முதன்முறையாக ‘சாதி மற்றும் மதம் அற்றவர்’ என அரசு சான்றிதழ் பெற்று, சாதியவாதிகள் அனைவரையும் தன் பக்கம் திரும்பிப் பார்க்கச் செய்துள்ளார்.
வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் வட்டத்தைச் சேர்ந்தவர் ம.ஆ.சிநேகா. திருப்பத்தூரில் வழக்கறிஞராகப் பணியாற்றி வரும் இவர், சாதி மதம் அற்றவர் என அரசு அங்கீகாரம் அளிக்க வேண்டும் வேண்டும் என கடந்த 2017-ம் ஆண்டு முதல் சட்டரீதியாக தொடர்ந்து பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார்.
இதன் பலனாக சிநேகா, பல்வேறு கட்ட போராட்டத்தில் வெற்றி பெற்று, தன்னை ‘சாதி மற்றும் மதம் அற்றவர்’ என அரசின் சான்றிதழ் மூலமாகவே பெருமையுடன் பறைசாற்றி உள்ளார்.
இது தொடர்பாக அவர் நியூஸ் 18 தமிழ் தொலைக்காட்சிக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது :- எங்கள் தாய், தந்தை இருவருமே வழக்கறிஞர்கள். எங்கள் வீட்டில் நான் உட்பட மூன்று அக்கா, தங்கைகள் இருக்கிறோம்.
மூன்று பேருமே வழக்கறிஞர்களாகத் தான் தற்போது உள்ளோம். எங்களது பெற்றோர் சாதி, மதம் இல்லையெனக் கூறியே தங்களை வளர்த்தனர்.
முதலாவதாக பள்ளியில் சேர்க்கும் போதே, சாதி மதம் அற்றவள் என் மகள் எனக் கூறிதான் எங்களது தந்தை எங்களைப் பள்ளியில் சேர்த்தார். சாதி, மதம் இல்லாமலா..? என பல கேள்விகளைக் கடந்துதான் பள்ளியில் இடம் கிடைத்தது.
சாதி மதம் எங்களது குடும்பப் பெயரில் கூட தெரியக்கூடாது என்பதற்காக, எனக்கு சினேகா என்றும், சகோதரிகளுக்கு மும்தாஜ், ஜெனிஃபர் எனப் பெயர் வைத்தார்கள். காவல்துறையினரால் கடுமையாக தாக்கப்பட்டு சிறையில் உயிர் நீத்த போராளி சிநேகலதா நினைவாகத்தான் சிநேகா என தனக்கு பெயர் வைக்கப்பட்டது.
எனக்கும் மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர். அவர்களுக்கு நானும், எனது கணவர் எழுத்தாளர் பார்த்தசாரதியும் சேர்ந்து எடுத்த முடிவின்படி, ஆதிரை நஸ் ரீன், ஆதிலா ஐரீன், ஆரிபா ஜெசி என பெயர் வைத்துள்ளோம்.
மதம் மக்களின் அபின் என மார்க்ஸ் சொல்லுவார். சாதிய அமைப்பிற்கு அடையாளமாக இருக்கும் சாதி சான்றிதழ் போல, சாதி மதம் அற்றவர் என்ற எங்களது வாழ்விற்கும் அடையாளம் வேண்டும். அதற்கும் ஒரு சான்று வேண்டும் என முடிவு செய்து கடுமையாக முயற்சி செய்தேன். கடந்த 2017-ம் ஆண்டு என்னுடைய கோரிக்கையை விண்ணப்பமாக வைத்த முயற்சி, இறுதியில் இன்றைக்கு ஜெயித்துவிட்டேன்.
என்ன சாதியென்று சொல்ல உரிமை இருக்கிறது. ஆனால், சாதி, மதம் இல்லையெனக் கூற உரிமை இல்லையென்று பலமுறை என்னுடைய விண்ணப்பம் தூக்கி எறியப்பட்டது. இன்றைக்கு திருப்பத்தூர் துணை ஆட்சியர் பிரியங்கா பங்கஜம், வட்டாட்சியர் சத்தியமூர்த்தி ஆகியோரின் உதவியினால்தான், எனது முயற்சிக்குப் பலன் கிடைத்துள்ளது, எனக் கூறினார்.