திருப்பூர் : மக்களவையில் 2019ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட் மீதான விவாதத்தில், கலந்து கொண்டு திருப்பூர் தொகுதி எம்.பி சத்தியபாமா பல்வேறு கோரிக்கைகள் குறித்து பேசினார்.
திருப்பூர் : மக்களவையில் 2019ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட் மீதான விவாதத்தில், கலந்து கொண்டு திருப்பூர் தொகுதி எம்.பி சத்தியபாமா பல்வேறு கோரிக்கைகள் குறித்து பேசினார்.
மக்களவையில் அவர் பேசியதாவது :- பேச்சு மற்றும் செவிப்புலன் குறையுடைய மாற்றுத்திறனாளிகளுக்காக, அலி ஜாவர் ஜங் தேசிய கல்வி நிறுவனத்துடன் இணைந்து ஒரு சிறப்பு கல்லூரியை திருப்பூர் தொகுதியில் விரைவில் அமைக்க வேண்டும்.

திருப்பூரின் பின்னலாடைத் துறை வர்த்தகம் ரூ.42 ஆயிரம் கோடியை எட்டியுள்ள நிலையில், நிர்ணயிக்கப்பட்ட இலக்கை அடைய முயற்சிகள் செய்ய வேண்டியுள்ளது. பின்னலாடை ஆயத்த ஆடைகளை உற்பத்தி செய்யும் தொழிலால் நாட்டின் 55% பங்கு வளர்ச்சி அடைகிறது. 6 லட்சம் தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கிறது. இவர்களில் 65 %பேர் ஓரளவு படித்த மற்றும் நாட்டின் ஊரகப் பகுதிகளைச் சேர்ந்த பெண்களாவர். ஆகையால், வேலைவாய்ப்புகளைப் பெருக்குவதோடு, நாட்டிற்கு அந்நிய செலாவணியையும் ஈட்டித் தரும் திருப்பூரின் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை அடைவதற்கான கட்டமைப்பு வசதிகளை வழங்க வேண்டும்.
திருப்பூர் பின்னலாடை மைய விரிவாக்கத்துக்கு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிக்கான உதவி தேவை. இதனால், உற்பத்தியாகும் பொருட்களின் வகைகள் அதிகரிப்பதோடு, வடிவமைப்பு துறை ஆற்றல்கள் மேம்பட்டு, வெளிநாடுகளில் இருந்து வாங்கக் கூடியவர்களின் தேவைகளை நிறைவேற்ற வாய்ப்பு உருவாகும்.
மேலும், பின்னலாடைத்துறையின் பொறுப்பை ஏற்று அதன் அதிவேக வளர்ச்சிக்கு உதவும் வகையில் அரசு தரப்பில் சிறப்பு அமைப்பு ஏதும் இல்லை. எனவே, இத்துறையின் வளர்ச்சியில் கவனம் செலுத்த ஊக்கக் காரணியாக செயல்படும் வகையில், பின்னலாடைத் துறைக்கான வாரியத்தை அரசு அமைக்க வேண்டும். திருப்பூரைத் தலைமையகமாகக் கொண்டு பின்னலாடை வாரியத்தை அமைத்தால், துறையின் தேவைகள் விரைந்து கவனிக்கப்பட்டு வளர்ச்சி துரிதப்படும்.
எந்தவித முறையான தொழில்நுட்ப ஒருங்கிணைப்போ, பயிற்சியும் கிடைக்கப்பெறாமல், உற்பத்தியில் நிலைத்தன்மை மற்றும் தர நிலை பராமரிப்பு ஆகியவை உருவாக்க முடியாமல் உள்ளது. ஆகையால், ஒருங்கிணைந்த முயற்சி மேற்கொண்டு, ஜவுளித்துறை மையங்களில் பணியில் உள்ளவர்களின் திறன் வளர்ப்புக்கான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.
பின்னலாடைத் துறையில் வேலைகளைப் பெறுவதற்காக, பல ஊர்களில் உள்ளவர்களும் இடம்பெயர்வதால் திருப்பூரில் தொழிலாளர்களுக்கு குடியிருப்புகளைக் கட்டித் தருவது மிக அவசியமாகும். ஆகையால், திருப்பூருக்கு குடிபெயர்ந்து வரும் தொழிலாளர்கள் வசதியாகத் தங்குவதற்காக, ஒரு லட்சம் வீடுகளைக் கட்டித்தருவதற்கு உதவ வேண்டும்.
ஈ.பி.சி.இ திட்டத்தின் கீழ் செய்யப்படும் இறக்குமதிகளுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. ஆனாலும், முன்கூட்டியே அனுமதி பெறும் திட்டத்தின் கீழ் இறக்குமதி செய்யப்படும் துணிகள் போன்றவற்றுக்கு நிவாரணம் நீட்டித்து வழங்கப்படவில்லை. எனவே, முன்கூட்டியே அனுமதி பெறும் திட்டத்தின் கீழ் இறக்குமதித் தீர்வை விவரங்களை சமர்ப்பிக்கும் ஏற்றுமதியாளர்களுக்கான, ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி தொகையை திரும்பப் பெறுவதற்கான வழிவகையை செய்ய வேண்டும்.
ஈ.ஜி.எம் விவரங்களை ஏற்றுமதி யூனிட்டுகள் தற்போது மேனுவலாக தாக்கல் செய்துவருகின்றன. ஜிஎஸ்டி தொகையை எளிதாகத் திரும்பப்பெறும் வகையில் இதனை ஆன்லைன் மூலமாக தாக்கல் செய்யும் வசதியை உருவாக்க வேண்டும். மேலும், பவானி ஜமக்காளம்-கைத்தறி தரைவிரிப்புகளுக்கு, 5% சதவிகித ஜி.எஸ்.டி வரியிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும்.
சமீபத்தில் சென்னைக்கு பயணம் மேற்கொண்ட மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர், தமிழ்நாட்டில் கேந்திரிய வித்யாலயாக்கள் இன்னும் அதிக எண்ணிக்கையில் அமைக்கப்படும் என்று உறுதியளித்தார். அதன்படி, திருப்பூரில், ஒரு கேந்திரிய வித்யாலயா நிறுவுவது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விசைத்தறி தொழில் மேம்பாடு மீது கவனம் செலுத்த பிரத்தியேகமாக ஒரு துறையை அமைக்கவேண்டும். இதன் மூலம் கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் இரண்டாவதாக அதிக வேலைவாய்ப்புகளை வழங்கும் விசைத்தறியின் குறைகள் களையப்படும்.
முத்ரா திட்டத்தின் கீழ், கடன் கோரி விண்ணப்பிக்கப்படும் மனுக்களை ஈரோடு மாவட்டத்தில் உள்ள பெரும்பான்மையான வங்கிகள் ஏற்க மறுக்கின்றன. எனவே, விசைத்தறி துறையை சார்ந்தவர்களுக்கு எந்தவித சிரமமும் இன்றி முத்ரா திட்டக் கடன்கள் கிடைக்க தேவையான அறிவுறுத்தல்களை வங்கிகளுக்கு அளிக்கவேண்டும்.
மேலும், புதுதில்லி கைத்தறித்துறை மேம்பாட்டு ஆணையர் அலுவலக ஆணையின்படி, கடந்த வருடம் ஏப்ரல் மாதம் 18ம் தேதி வெளியிட்ட ஆணை எண் (1/2/2016DCH/P&S) படி, கைத்தறித்துறை நெசவாளர்களாக உள்ள தொழில் முனைவோர் தகுதியுடைய பயனாளிகளில் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். இதனால், அவர்கள் நலத்திட்டங்களின்கீழ் நூலிழை பெற முடியாத நிலையுள்ளது. எனவே, அனைத்துக் கைத்தறி நெசவாளர்களுக்கும் நெசவாளர் அடையாள அட்டைகளை வழங்கவும், நேரடி மானியத்தை வங்கிக்கணக்குகளில் செலுத்தும் டி.பி.டி திட்டத்தின்கீழ் திட்டப் பயன்களை அவர்கள் அடையவும் வழிவகை செய்ய வேண்டும்.
தென்னக ரயில்வேயின் சேலம் மண்டலத்துக்கு குறிப்பிட்ட வருவாயை, திருப்பூரில் ஏ கிரேடு ரயில் நிலையம் ஈட்டித்தருகிறது. எனவே, கூடுதல் நடைமேடை, கூடுதல் டிக்கெட் புக்கிங் கவுண்ட்டர், ரயில் வண்டியின் பெட்டிகள் வருவது மற்றும் புறப்பட்டுச் செல்வது பற்றிய டிஜிட்டல் எல்.இ.டி தகவல் போர்ட் உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் திருப்பூர் ரயில் நிலையத்தை நவீனமயமாக்க மத்திய அரசு உதவ வேண்டும், இவ்வாறு அவர் பேசினார்.