கோவை : குனியமுத்தூர் பகுதியில் உள்ள கிணற்றில் இருந்து அழுகிய நிலையில் இளைஞரின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை : குனியமுத்தூர் பகுதியில் உள்ள கிணற்றில் இருந்து அழுகிய நிலையில் இளைஞரின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை மாவட்டம் குனியமுத்தூரில் உள்ள பாரதிநகரில் இருக்கும் கிணற்றில் இருந்து இன்று அதிகாலை துர்நாற்றம் வீ சி வந்தது. இதனால், சந்தேகம் அடைந்த அந்தப் பகுதி மக்கள் துர்நாற்றம் வீசுவது தொடர்பாக குனியமுத்தூர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் கிணற்றில் பார்த்தபோது, அங்கு சடலம் ஒன்று இருப்பது தெரிய வந்தது. இந்த சடலம் சுமார் 18 வயது மதிக்கத்தக்க இளைஞரின் சடலம் எனக் கண்டறியப்பட்டது.
பின்னர், இந்த சடலத்தை மீட்பதற்காக தீயணைப்பு மற்றும் மீட்பு துறையினருக்கு குனியமுத்தூர் போலீசார் தகவல் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து, அங்கு வந்த தீயணைப்பு வீரர்கள், கிணற்றில் இருந்து அழுகிய நிலையில் இருந்த இளைஞரின் உடலை மீட்டு, கோவை அரசு மருத்துவமனைக்குப் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இந்த அடையாளம் தெரியாத இளைஞரின் மர்ம மரணம் குறித்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், இவர் குனியமுத்தூரை சேர்ந்த அப்பாஸ் என்பவரின் மகன் அசாருதீன் என்பதும், இவர் கார் மெக்கானிக்காக பணியாற்றி வந்ததும் தெரியவந்தது. அதேபோல, கடந்த சில தினங்களாக மன நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அசாருதீன், கடந்த சில நாட்களாக காணாமல் போனதும் தெரியவந்துள்ளது.
இந்த நிலையில், இளைஞரின் உடலை மீட்ட போலீசார், இவரது மர்ம மரணம் குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.