கோவை : சின்னத்தம்பியை கும்கியாக மாற்ற எதிர்ப்பு தெரிவித்து உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் நாளை வனத்துறை ஆராய்ச்சியாளர் அஜய் தேசாய் ஆஜராகி விளக்கமளிப்பார் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
கோவை : சின்னத்தம்பியை கும்கியாக மாற்ற எதிர்ப்பு தெரிவித்து உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் நாளை வனத்துறை ஆராய்ச்சியாளர் அஜய் தேசாய் ஆஜராகி விளக்கமளிப்பார் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
கோவை மாவட்டம், தடாகம் வனப்பகுதியில் சுற்றித்திரிந்த யானைகள் விநாயகன் மற்றும் சின்னத்தம்பி. விவசாயிகளின் அழுத்தம் காரணமாக, இந்த இரண்டு காட்டு யானைகளை வனத்துறையினர் பிடித்து முதுமலை மற்றும் வரகழியாறு வனப்பகுதிகளில் விட்டுள்ளனர்.
இதில், சின்னத்தம்பி யானை தற்போது தொடர்ந்து ஊருக்குள் உலா வருகிறது. இந்த யானையை காட்டுக்குள் அனுப்ப வனத்துறை பல்வேறு முயற்சி செய்தனர்.
அந்த முயற்சியில், அதனை கும்கியாக மாற்றவும் முடிவு செய்தனர். அந்த முடிவை எதிர்த்து ஆர்வலர்களால் வழக்குத் தொடுக்கப்பட்டது.
இந்நிலையில், விலங்கு நல ஆர்வலர்கள் அருண் பிரசன்னா மற்றும் முரளிதரன் ஆகியோர் தொடர்ந்த பொதுநல வழக்கு, நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது வனத்துறையினர் சின்னத்தம்பி குறித்து அறிக்கை சமர்பித்தனர்.
அந்த அறிக்கையில் தலைமை வனப்பாதுகாவலர் கூறியுள்ளதாவது ;- சின்னத்தம்பி யானையை பிடித்து முகாமில் அடைப்பதைத் தவிர வேறு வழியில்லை, சின்னத்தம்பி யானையை மிகவும் சாதுவாக மாறிவிட்டதால் மீண்டும் அதனை காட்டுக்குள் திருப்பி அனுப்புவதில் சிரமம் உள்ளது.
காட்டிற்குள் அனுப்ப முயற்சித்தும் யானை மீண்டும் ஊருக்குள் நுழைந்து விடுகிறது. வனத்துறை அதிகாரிகள் மற்றும் அதிகாரிகளின் கருத்தின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. யானைகள் நிபுணர் அஜய் தேசாய் அளித்த அறிக்கையின் படி சின்னத்தம்பி யானையை முகாமில் வைத்து பாதுகாக்க உள்ளோம், எனத் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இதனைத் தொடர்ந்து இந்த மனு மீதான விசாரணை இன்றும் நடைபெற்றது. அப்போது, சின்ன தம்பியின் பாதுகாப்பை அரசு உறுதி செய்ய வேண்டும் என நீதிபதிகள் அறிவுறுத்தினர். மேலும், சின்னதம்பிக்கு இயற்கை உணவுகளைக் கொடுத்து பழக்கி, ஏன் மீண்டும் காட்டிற்குள் அனுப்பக் கூடாது எனக் கேள்வி எழுப்பினர்.
இதற்கு தமிழக அரசு பதிலளிக்கையில், "சின்னதம்பி யானையை முகாமுக்கு அனுப்புவது தொடர்பாக நாளை விரிவான விளக்கம் அளிக்கப்படும். இதுகுறித்து வன ஆராய்ச்சியாளர்/ யானைகள் நிபுணர் அஜய் தேசாய் நாளை ஆஜராகி விளக்கமளிப்பார். அதோடு, அறிக்கையும் அளிக்கிறோம்," எனக் கூறியது.