திருப்பூர் : தமிழகத்தை வஞ்சித்த பச்சை துரோகி பிரதமர் மோடி, தமிழகத்திற்கு எங்கு வந்தாலும் மதிமுக கருப்புக்கொடி காட்டும் என திருப்பூரில் போராட்டத்தில் ஈடுபட்ட மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
திருப்பூர் : தமிழகத்தை வஞ்சித்த பச்சை துரோகி பிரதமர் மோடி, தமிழகத்திற்கு எங்கு வந்தாலும் மதிமுக கருப்புக்கொடி காட்டும் என திருப்பூரில் போராட்டத்தில் ஈடுபட்ட மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

தமிழகத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, திருப்பூர் ரயில் நிலையம் முன்பு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தலைமையில், அக்கட்சியினர் கருப்பு கொடி போராட்டம் நடத்தினர். அதில், கஜா புயல், காவிரி உள்ளிட்ட தமிழக வாழ்வாதார பிரச்சனைகளில் பிரதமர் மோடி தமிழத்திற்கு துரோகம் செய்ததாக போராட்டக்காரர்கள் குற்றம்சாட்டினார்.
இந்நிலையில், வைகோ பேசிக் கொண்டிருந்த போது பாஜகவை சேர்ந்த சசிகலா என்பவர் 'பாரத் மாதா கீ ஜெ' என முழக்கமிட்டார். மேலும், போராட்டக்காரர்களைச் செருப்பால் அடிக்க முயன்ற சசிகலாவை, மதிமுக தொண்டர்கள் தாக்கியதால் மோதல் ஏற்பட்டது. அப்போது கற்கள் வீசியதில் மதிமுகவினரின் ஒரு கார் கண்ணாடி உடைந்தது. இதையடுத்து, காவல் துறையினர் சசிகலாவை பத்திரமாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். மேலும், காவல்துறையினர் சசிகலா மீது பொது அமைதிக்கு இடையூறு விளைவித்ததாக, திருப்பூர் வடக்கு காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்நிலையில், போராட்டத்தின் போது காவல் துறையினர் கைது செய்ய முயன்றதால், வைகோ 3 முறை வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனிடையே, போராட்டக்காரர்களைக் காவல் துறையினர் வலுக்கட்டாயமாகக் கைது செய்ய முயன்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த திலகர் என்ற மதிமுக தொண்டர் மின்கோபுரத்தில் ஏறி போராட்டம் நடத்தியதால் பதட்டம் ஏற்பட்டது. இதையடுத்து, வைகோ வேண்டுகோளை ஏற்று திலகர் அரை மணி நேரத்திற்கு பின் கீழே இறங்கினார்.

இதற்கிடையே, வைகோ பேசியதாவது :- சுதந்திர இந்தியா கண்டிராத துரோகங்களை பிரதமர் மோடி செய்துள்ளார். காவிரி, ஹைட்ரோ கார்பன், நியூட்ரினோ, முல்லை பெரியாறு உள்ளிட்ட பிரச்சனைகளில் தாங்க முடியாத துரோகங்களை மத்திய அரசு செய்துள்ளது. சமஸ்கிருதத்தைத் திணிக்க மத்திய அரசு முயற்சி செய்கிறது. தமிழகத்தை வஞ்சித்த பச்சை துரோகி பிரதமர் மோடி. எடப்பாடி பழனிசாமி சிறைக்கு செல்வார். வைகோவை சீண்டி பார்க்காதீர்கள் என ஆவேசமாகத் தெரிவித்தார்.
மோடி மீது எனக்கு தனிப்பட்ட எந்த பகையும் இல்லை. தமிழகத்தை அழிக்க நினைப்பதால் எதிர்க்கிறேன். இந்த மண்ணின் வேலைக்காரன் நான். உயிருள்ள வரை தமிழக மக்களின் உரிமைக்காக போராடுவேன். மத நல்லிணக்கத்தைக் கெடுக்க இந்துத்துவா அமைப்புகள் முயற்சி செய்கின்றன. மத மோதலை உருவாக்கி தமிழகத்தில் ஆட்சியை கைப்பற்ற இந்துத்துவா அமைப்புகள் முயற்சி செய்கிறது. அணை பாதுகாப்பு மசோதா வந்தால் தமிழ்நாடு பாதிக்கப்படும். இம்மசோதா வந்தால் சோவியத் யூனியன் போல இந்தியா சிதறும். மதிமுக கட்சியை உயிராக நேசிக்கிறேன். உயிரை விட தமிழக மக்களை அதிகம் நேசிக்கிறேன், இவ்வாறு அவர் பேசினார்.

"தமிழகத்திற்கு வஞ்சகம் செய்த மோடி தமிழகத்தில் எங்குவந்தாலும் போராட்டம் நடத்துவோம். வருகின்ற நாடாளுமன்ற தேர்தலானாலும், 21 சட்டமன்ற தேர்தலானாலும், திமுக கூட்டணி வெற்றி பெறும். அதற்காக மதிமுக உழைக்கும்," என்றார் வைகோ.

மேலும், இரண்டரை மணி நேரத்திற்கு மேலாக நடந்த போராட்டத்திற்கு பின்னர், கருப்பு கொடி போராட்டம் நடத்திய மதிமுக,.வினர் 200க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.