நீலகிரி : கோடநாடு எஸ்டேட் காவலாளி கொலை வழக்கு தொடர்பான விசாரணைக்கு ஆஜராகாதவர்களுக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டதையடுத்து, பிஜின்குட்டி மற்றும் தீபு ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நீலகிரி : கோடநாடு எஸ்டேட் காவலாளி கொலை வழக்கு தொடர்பான விசாரணைக்கு ஆஜராகாதவர்களுக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டதையடுத்து, பிஜின்குட்டி மற்றும் தீபு ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கோடநாட்டில் உள்ள முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட்டில், கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் 13-ம் தேதி கொள்ளை முயற்சி நடந்தது. இதில், காவலாளி ஓம் பகதூர் கொலை செய்யப்பட்டார். இந்தக் கொலை மற்றும் கொள்ளை வழக்கில் 11 பேர் ஈடுபட்டிருந்தது தெரியவந்தது. இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான கனகராஜ் சாலை விபத்தில் உயிரிழந்தார். மீதமுள்ள சயான், மனோஜ், திபு, ஜிதின்ஜாய், ஜம்சீர்அலி, சந்தோஸ்சாமி, உதயகுமார், சதீசன், வாளையார் மனோஜ், பிஜின்குட்டி ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
பின்னர் அவர்கள் அனைவரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். மேலும், இந்த வழக்கு தொடர்பான விசாரணையின் போது நேரில் ஆஜராகியும் வந்தனர். இந்த நிலையில், கோடநாடு கொலை வழக்கில் தொடர்புடைய 10 பேரையும் மாவட்ட நீதிமன்றம் கடந்த 8ம் தேதி நேரில் ஆஜராக உத்தரவிட்டிருந்தது. ஆனால், ஜம்சீர் அலி, சதீசன், உதயகுமார், சந்தோஷ்சாமி, மனோஜ், ஜிதின்ஜாய் ஆகிய 6 பேர்கள் மட்டுமே அன்று ஆஜராகினர். பிஜின், திபு ஆஜராகவில்லை. மேலும், சயான், வாளையார் மனோஜ் ஆகிய இருவர் மீதும் கூடுதலாக ஒரு வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை அவதூறாக பேசியதாக கடந்த ஜனவரி மாதம் 16-ம் தேதி அரசு தரப்பில் அரசு வழக்கறிஞர் நந்தகுமார் உதகை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கும் இன்று விசாரிக்கப்பட உள்ள நிலையில், இவர்கள் இருவரும் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இதனால், நீதிமன்றத்தில் இன்று ஆஜராகாத பிஜின், திபு, சயான் மற்றும் வாளையார் மனோஜ் ஆகிய 4 பேருக்கும் பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிபதி வடமலை உத்தரவிட்டார்.
இந்நிலையில், இன்று பிஜின்குட்டி மற்றும் தீபு ஆகிய இருவரையும் கேரள மாநிலத்தில் நீலகிரி தனிப்படை போலீசார் கைது செய்தனர். மேலும், முக்கிய குற்றவாளிகளான சயான் மற்றும் வாளையார் மனோஜ் ஆகியோரை தனிப்படையினர் போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.