கோவை : பிரதமர் மோடி நாளை பங்கேற்க உள்ள திருப்பூர் பொதுக்கூட்டம், தமிழக பா.ஜ.க.விற்கு பெரும் திருப்புமுனையாக அமையும் என பா.ஜ.க. மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
கோவை : பிரதமர் மோடி நாளை பங்கேற்க உள்ள திருப்பூர் பொதுக்கூட்டம், தமிழக பா.ஜ.க.விற்கு பெரும் திருப்புமுனையாக அமையும் என பா.ஜ.க. மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
திருப்பூரில் மத்திய அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் பா.ஜ.க. பொதுக் கூட்டம் நாளை நடக்கிறது. இதில், பிரதமர் மோடி கலந்து கொண்டு, நலத்திட்ட உதவிகளை வழங்க இருக்கிறார். இந்தக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக தமிழக பா.ஜ.க., தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விமானம் மூலம் கோவை வந்தடைந்தார். அங்கு அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அவர் கூறியதாவது :- பிரதமர் மோடியின் வருகையை பா.ஜ.க.,வினர் மட்டுமல்லாமல் தமிழக மக்களும் எதிர் நோக்கியுள்ளனர். மோடி தமிழகம் வருகையை அடுத்து பல திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுக்கிறார். பல திட்டங்களை மக்களுக்காக திறந்தும் வைக்க இருக்கிறார். விமானத்தில் என்னுடன் கவுகாத்தியில் இருந்து தமிழகம் வந்தவர்கள் சிலர், பிரதமர் மோடி திருப்பூர் வருவது, மிக்க மகிழ்ச்சி எனக் கூறினர். அந்த அளவுக்கு மோடியின் வருகையை தமிழக மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
தமிழகத்தில் வளர்ச்சி பாதையை பிரதமர் மோடி கொண்டு வந்து கொண்டிருக்கிறார். இதனை எதிர்க்கட்சிகளால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. அதனால், ரபேல் போர் விமானம் ஊழல் என குற்றம்சாட்டுகின்றனர்.
இது குறித்து கொச்சினில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் ராணுவ செயலாளர், ரபேல் போர் விமானம் வாங்கியதில் ஊழல் நடைபெறவில்லை என்றும், 148 விமானங்களுக்கு ஆர்டர் செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது வரை 36 விமானங்கள் வாங்கப்பட்டுள்ளதாக கூறினார். போர் விமானங்கள் வாங்கியது நாட்டின் பாதுகாப்பிற்காகத்தான். ஆனால், நாட்டின் பாதுகாப்பை காங்கிரஸ் கொச்சைப்படுத்துகிறது. மத்தியில் ஊழலற்ற ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதனை காங்கிரஸ் கட்சியால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.
திருப்பூர் கூட்டம் திருப்புமுனையாக அமையும். நாடாளுமன்ற தேர்தலுக்கான பிரச்சாரத்தை எப்போதே பா.ஜ.க. தொடங்கிவிட்டது. மதுரை மாநாட்டில் 9 நாடாளுமன்ற தொகுதியைச் சேர்ந்த மக்கள், தொண்டர்கள் பங்கேற்றனர். திருப்பூர் கூட்டத்தில் 8 நாடாளுமன்ற தொகுதியை சேர்ந்த மக்கள், தொண்டர்கள் பங்கேற்கவுள்ளனர். பா.ஜ.க., தமிழகத்தில் தனித்து போட்டியிடாது. பா.ஜ.க. கூட்டணி அமைத்து தான் போட்டியிடும். காங்கிரஸ் - திராவிட கட்சிகள் கூட்டணியைத் தவிர்த்து மற்ற கட்சிகளுடன் கூட்டணி அமைக்கப்படும். தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரியால் காங்கிரஸ் பலப்படுத்த முடியாது.
பிரதமர் மோடி கொடுத்த எல்லா வாக்குறுதியும் நிறைவேற்றப்பட்டுள்ளது. பா.ஜ.க. கூட்டணி கொள்கை ரீதியில் அமைக்கப்படும். அதற்கான அணுகுமுறை மேற்கொண்டு வருகிறோம். கமல்ஹாசன் மதிப்பிடும் அளவிற்கு பா.ஜ.க. இல்லை. தமிழகத்திற்கு பிரதமர் மோடி என்ன செய்துள்ளார் என கமல் கேட்கட்டும். அதற்கான பட்டியலை நான் இடுகிறேன், எனக் கூறினார்.