திருப்பூர் : உடுமலை அருகே உள்ள கிருஷ்ணாபுரத்தில் கால்நடைதுறை அமைச்சர் இராதாகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டிருக்கும் போது, திடீரென கரும்பு தோட்டத்திற்குள் இருந்து வெளியேறிய சின்னத்தம்பியால் பதற்றம் ஏற்பட்டது.
திருப்பூர் : உடுமலை அருகே உள்ள கிருஷ்ணாபுரத்தில் கால்நடைதுறை அமைச்சர் இராதாகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டிருக்கும் போது, திடீரென கரும்பு தோட்டத்திற்குள் இருந்து வெளியேறிய சின்னத்தம்பியால் பதற்றம் ஏற்பட்டது.

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே கிருஷ்ணாபுரத்தில் கடந்த 5 நாட்களாக காட்டு யானை சின்னத்தம்பி முகாமிட்டுள்ளது. காலை முதல் மாலை வரை முள்வேளியில் ஓய்வு எடுப்பது, மாலையிலிருந்து காலை வரை கும்கி யானைகளோடு விளையாடுவது என இருந்து வரும் சின்னத்தம்பியை, கும்கியாக மாற்ற எதிர்ப்பு தெரிவித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டு நிலுவையில் உள்ளது. இதனால், சின்னத்தம்பியை என்ன செய்வதென்று தெரியாமல் வனத்துறை அதிகாரிகள் தவித்து வருகின்றனர். மேலும், அரசு தரப்பில் இருந்தும் எந்த உத்தரவும் வராமல்
இருப்பதும் வனத்துறையினருக்கு சின்னத்தம்பியை இடம் மாற்றும் ஆபரேஷனுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

சின்னத்தம்பியை பிடிப்பதற்காக வரவழைக்கப்பட்ட கலீம் மற்றும் மாரியப்பன் ஆகிய கும்கி யானைகளும் 3 நாட்களாக கட்டி வைக்கப்பட்டுள்ளது. சின்னத்தம்பியை கண்காணிக்க 70-க்கும் மேற்பட்ட வனக்காப்பாளர்கள் இரவு பகலாக பணியில் ஈடுபடுத்தபட்டுள்ளனர். இதனிடையே, அமராவதி சர்க்கரை ஆலையில்ஃ முகாமிட்டுள்ள சின்னத்தம்பி, ஆலையின் ஊழியர்கள் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து, வீட்டின் கதவை உடைத்து அரிசியை உணவாக எடுத்துக் கொண்டது. எனவே, சர்க்கரை ஆலை ஊழியர்கள் சின்னத்தம்பியை இப்பகுதியிலிருந்து வெளியேற்றக் கோரி வனத்துறை அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்தனர். மேலும், போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்த நிலையில், கால்நடைத்துறை அமைச்சர் இராதாகிருஷ்ணன் சம்பவ இடத்திற்கு நேரில் பார்வையிடச் சென்றார்.

அங்கு அமைச்சர் இராதாகிருஷ்ணன், அதிகாரிகளுடன் ஆய்வு செய்து கொண்டிருந்த நேரத்தில், சின்னத்தம்பி சற்றும் யாரும் எதிர் பாக்காத வகையில், அமைச்சரின் அருகில் வந்ததால் பரபரப்பு நிலவியது. பின்னர், அருகிலுள்ள கட்டிடத்திற்குள் அமைச்சரை பாதுகாப்பாக வனத்துறையினர் அழைத்து சென்றனர். பின்னர், சிறிது நேரத்தில் சின்னத்தம்பி மீண்டும் கரும்பு காட்டிற்குள் சென்றான்.