திருப்பூர் : உடுமலைப்பேட்டையில் தொடர்ந்து 5-வது நாளாக தஞ்சம் புகுந்துள்ள சின்னதம்பி யானையை நாளை மாலைக்குள் வனப்பகுதிக்குள் விரட்டும் நடவடிக்கையை எடுக்க வனத்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.
திருப்பூர் : உடுமலைப்பேட்டையில் தொடர்ந்து 5-வது நாளாக தஞ்சம் புகுந்துள்ள சின்னதம்பி யானையை நாளை மாலைக்குள் வனப்பகுதிக்குள் விரட்டும் நடவடிக்கையை எடுக்க வனத்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.
கோவை தடாகம் பகுதியில் சுற்றித்திரிந்த காட்டு யானை சின்னத்தம்பி, கடந்த சில தினங்களுக்கு முன்னர் வனத்துறையினரால் பிடிக்கப்பட்டு, டாப்சிலிப் வனப்பகுதியில் கொண்டு சென்று விடப்பட்டது. ஆனால், வனப்பகுதியில் இருந்து வெளியேறிய சின்னத்தம்பி அங்கலக்குறிச்சி, தேவனூர் உட்பட பல்வேறு கிராமங்களில் சுற்றித் திரிந்து வருகிறது. சின்னத்தம்பி யானையை வனத்துறையினர், தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

கோவையில் நடந்த விழா ஒன்றில் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், சின்னத்தம்பியை கும்கியாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்தார். இதையடுத்து, சின்னத்தம்பியை கும்கியாக மாற்றக் கூடாது என உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கின் விசாரணையின் போது, சின்னத்தம்பியை கும்கியாக மாற்ற மாட்டோம் என தமிழக அரசு உத்தரவாதம் அளித்தது.
இந்த நிலையில், சுமார் 150 கி.மீ நடந்து உடுமலைப் பேட்டை அருகே கிருஷ்ணாபுரம் என்னும் இடத்தில் உள்ள அமராவதி கரும்பு ஆலைக்கு சொந்தமான கரும்புத் தோட்டத்தில் தற்போது முகாமிட்டுள்ளது. தற்போது, சின்னத்தம்பியை விரட்டுவதற்காக வந்த கலீம், மாரியப்பன் ஆகிய கும்கி யானைகளுடன் நட்புடன் பழகி வருகிறது. கடந்த இரண்டு நாட்களாக கலீமும், சின்னதம்பியும் நெருங்கிய நண்பர்களாக மாறி கொஞ்சி விளையாடி வருகின்றன. இதனால், சின்னதம்பியை வனத்திற்குள் அனுப்ப முடியாமல் வனத்துறையினர் தவித்து வருகின்றனர்.

கடந்த 5 நாட்களாக மக்கள் நடமாட்டம் இருக்கும் பகுதியிலேயே சுற்றித்திரியும் சின்னத்தம்பி, எந்த உயிர்ச்சேதமோ, பயிர்சோதமோ, பொருட்சேதமோ..? ஏற்படுத்தவில்லை என்பது அப்பகுதி மக்களிடையே ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், தடாகம் பகுதியில் நிகழ்த்தியது போன்றே, உடுமலையிலும் குடியிருப்பு ஒன்றை உடைத்து அரிசியை மட்டுமே ஒருமுறை உணவாக சின்னத்தம்பி எடுத்துக் கொண்டதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது.
இதனிடையே, சின்னத்தம்பி முகாமிட்டிருப்பதால், ஆலைப் பணியினை மேற்கொள்ள முடியவில்லை எனக் கூறி, சின்னத்தம்பியை அங்கிருந்து வெளியேற்றுமாறு வனத்துறையினருக்கு ஆலையின் உரிமையாளர் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில், யானைகள் பற்றிய அனுபவ வல்லுநர் அஜய் தேசாய் நேற்று சின்னத்தம்பி முகாமிட்டுள்ள பகுதிக்கு நேரில் சென்று பார்வையிட்டார். அப்போது, சின்னத்தம்பி இதுவரை பொதுமக்களிடம் எந்தவிதமான தாக்குதலையும் நிகழ்த்தவில்லை என்றும், தொடர்ந்து மக்களுடன் நெருக்கமாக இருந்து வருவதாகக் கூறினார்.
ஒருவேளை சின்னத்தம்பியை ஆலைப் பகுதியில் இருந்து வனப்பகுதிக்கும் விரட்டும் முறை தொடர்பான உத்தரவு நாளை வந்தடைந்தால், அதன்படி, சின்னத்தம்பியை கிருஷ்ணாபுரம் குடியிருப்புப் பகுதியில் இருந்து வெளியேற்றுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என வன அதிகாரிகள் தெரிவித்தனர்.