கோவை : கோவை, வையம்பாளையத்தில் உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் 95ம் பிறந்த நாள் மற்றும் மணிமண்டப திறப்பு விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு, மண்டபத்தைத் திறந்து வைத்தார்.
கோவை : கோவை, வையம்பாளையத்தில் உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் 95ம் பிறந்த நாள் மற்றும் மணிமண்டப திறப்பு விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மண்டபத்தைத் திறந்து வைத்துடன் புதிய திட்டங்களை தொடங்கி வைத்தார்.

கோவை மாவட்டம், வையம்பாளையத்தில் உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் 95ம் பிறந்த நாள் விழா சிறப்பிக்கப்பட்டது. இதில், கலந்து கொள்ள கோவை வருகை புரிந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு, விமான நிலையத்தில் வைத்து கட்சியினர் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதையடுத்து, நாராயணசாமி நாயுடுவின் நினைவாகக் கட்டப்பட்ட மணிமண்டபம் மற்றும் திரு உருவ சிலையை தமிழக முதல்வர் திறந்து வைத்து, மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். மேலும், புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

இந்நிகழ்வில், ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, பொள்ளாச்சி ஜெயராமன், சட்டமன்ற உறுப்பினர்கள் ஆறுகுட்டி, ஒ.கே.சின்னராஜ், எட்டிமடை சண்முகம், பி.ஆர்.ஜி அருண்குமார், கஸ்தூரி வாசு, அம்மன் அர்ஜுனன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மகேந்திரன், செல்வராஜ் முன்னாள் மேயர் செ.ம.வேலுசாமி உள்ளிட்ட ஏராளமானோர் இந்நிகழ்வில் பங்கேற்றனர். இதனிடையே, கணபதி மற்றும் கோவில்பாளையம் பகுதிகளில் செண்டா மேளத்துடன் கோலாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதையடுத்து, கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் ஆறுகுட்டி கூறும் போது, விவசாய மக்களின் கோரிக்கையை ஏற்று, இதனை விவசாய குடும்பத்தில் இருந்து வந்த முதலமைச்சர் திறந்து வைத்து உள்ளார். வரும் காலங்களிலும் விவசாயிகள் குறைகளை தீர்க்க நடவடிக்கைகள் எடுக்கப்படும், என்றார். அவரைத் தொடர்ந்து பேசிய பி.ஆர்.ஜி.அருண்குமார் , முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆணையை ஏற்று குறுகிய காலத்தில் நிதி ஒதுக்கி இதனை முதல்வர் திறந்து வைத்து உள்ளார், என்றார்.
இவ்விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், "விவசாயிகளின் ஒப்பற்ற தலைவராக விளங்கியவர் நாராயணசாமி நாயுடு. அவரது நினைவிடத்தில் மணிமண்டபம் அமைக்க ரூ.2 கோடி ஒதுக்கீடு செய்தவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. இந்நிலையில், ஒரு விவசாயியாகிய நான், அவரின் மணி மண்டபத்தைத் திறந்து வைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த அரசு விவசாயிகளுக்கு அரண்.

அத்திக்கடவு- அவினாசி திட்டத்திற்கு இந்த மாத இறுதிக்குள் அடிக்கல் நாட்டப்படும். குடிமராமத்து மூலம் மேற்கொள்ளப்பட்டது. அத்திக்கடவு - அவினாசி திட்டத்தில் சில பகுதிகள் விடுபட்டுள்ளதாக விவசாயிகள் வைத்த கோரிக்கையின் அடிப்படையில் திட்டம் 2 அறிவிக்கப்பட்டு அந்த திட்டத்தின் கீழ் விடுபட்ட பகுதிகள் இணைக்கப்படும்.
பிரதம மந்திரியின் காப்பீடு திட்டத்தில் அதிக அளவிலான காப்பீடு இழப்பீடு தொகை பெற்றதில் தமிழகமே முதலிடம் பிடித்துள்ளது. விவசாயிகள் காய்கறிகளை ஆன்லைனில், விற்பனை செய்யவும், குளிர் சாதனக்கிடங்கில் சேமிக்கவும், வழிவகை செய்யப்படும்.
சென்னையில் 300 ஏக்கரில் மிகப்பெரிய உணவு பூங்கா அமைக்கப்படும். இதன் மூலம் விளை பொருட்கள் அதிக விலை பெறும். கால்நடை ஆராய்ச்சி மையம் தமிழகத்தில் அமைக்கப்படும். நதிகள், ஓடைகள் குறுக்கே ஓடைகால் கட்டும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. கடலில் வீணாகக் கலக்கின்ற நீரை ஓடைகளில் தடுப்பணை கட்டி நிலத்தடி நீர் காப்பற்றபடும். இந்த திட்டத்திற்கு, ஒய்வு பெற்ற நான்கு தலைமை பொறியாளர்களை வைத்து ஆய்வு மேற்கொள்ளப்படும்.
மேலும், கோதாவரி காவிரி இணைப்பு திட்டம், மத்திய அரசுடன் இணைந்து முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் இந்த அரசு நிச்சயம் நிறைவேற்றும். இதன் மூலம் தமிழகத்திற்கு 200 டி.எம்.சி தண்ணீர் கொண்டு வரப்படும். இந்த திட்டத்தால், தண்ணீர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு எட்டப்படும், என்றார்.
"இந்த இரண்டாண்டு காலத்தில் கோவை மாவட்டம் பல்வேறு வளர்ச்சியை கண்டு உள்ளது. மேம்பால பணிகள், சாலை விரிவாக்கம் என பல்வேறு வளர்ச்சி செயல்படுத்தப்பட்டு உள்ளது. நமது முதலமைச்சர் சாதாரண முதலமைச்சர் அல்ல, அசாதாரண முதல்வர். குடிநீர் பராமரிப்பு திட்டம், ஆனைமலை-நல்லாறு திட்டம் நிச்சயம் நிறைவேற்றப்படும். மேலும், அவிநாசி-அத்திகடவு திட்டம் விரைவில் அடிக்கல் நாட்டப்பட்டு செயல்படுத்தப்படும்.
மேலும், நீரா திட்டம் அனுமதிக்கப்பட்டு தென்னை விவசாயிகள் பலனடைந்துள்ளனர். என்றைக்கும் ஒரு விவசாயி முதலமைச்சராக இருந்தால் தான் விவசாயிகளின் கஷ்டங்கள் புரியும். முன்னாள் முதல்வர் ஒரு விவசாயியை முதல்வராக கொடுத்து உள்ளார்," என்றார் பொள்ளாச்சி ஜெயராமன்.
இந்நிகழ்வில், அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறியதாவது ;- 110 விதியின் கீழ் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இதனை முன்னரே அறிவித்தார். அதனை இன்று முதல்வர் எடப்பாடி தொடக்கி வைத்துள்ளார். இந்த விழா சம்பிரதாயதிற்காக இல்லாமல் குடும்ப விழாவாக நடைபெற்று வருகிறது.
மக்களால் நான், மக்களுக்காக நான் என வாழ்ந்து சென்ற முன்னாள் முதல்வர், வாழ்ந்து சென்றவர்களுக்கு மணி மண்டபம் கட்டி சிறப்பு செய்துள்ளார். தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் பல்வேறு மாவட்டங்களில் மணி மண்டபம் அமைக்கப்பட்டு திறக்கப்பட்டு உள்ளது, இவ்வாறு அவர் பேசினார்.
"தமிழக மக்களின் பிரச்சினைகளை கருத்தில் கொண்டு, முதல்வர் இரவும் பகலும் உழைத்து வருகிறார். பதவி ஏற்ற நாளில் இருந்து ஆட்சி கவிழ்ந்து விடும் என எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் உட்பட நிறைய பேர் நினைத்து வருகிறார்கள். ஆனால், அவர் கான்கிரீட் போட்டு அமர்ந்து உள்ளார். அவரை யாராலும் அசைக்க முடியாது.
சட்ட போராட்டம் நடத்தி காவிரி ஆணையம் அமையக் காரணம் இந்த அரசு. கோவை மாவட்டத்தில் 50 ஆண்டுகளாக இல்லாத வளர்ச்சியை முதல்வர் தலைமையான ஆட்சி செய்து உள்ளது. விபத்து மற்றும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க, மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது," என்றார் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி.

மேலும், இவ்விழாவில் அரசு சட்டக் கல்லூரியில் ரூ.10.16 கோடி மதி்ப்பீட்டில் நூலகம் மற்றும் கலையரங்கம், கவுண்டம்பாளையம் பகுதியில் ரூ.3.55 கோடி மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்க அலுவலகம், ரூ.2.75 கோடி மதிப்பீட்டில் எஸ்.எஸ்.குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் ஆகியவற்றிற்கு அடிக்கல் நாட்டப்பட்டது.