கோவை : கோவை மாவட்டத்தில், மாநகர காவல் துறையின் சார்பில், 30வது சாலை பாதுகாப்பு வார விழாவையொட்டி இன்று விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
கோவை : கோவை மாவட்டத்தில், மாநகர காவல் துறையின் சார்பில், 30வது சாலை பாதுகாப்பு வார விழாவையொட்டி இன்று விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

தமிழகம் முழுவதும் 30வது சாலை பாதுகாப்பு வார விழாவானது கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், நேற்று கோவையில் தொடங்கப்பட்ட இந்த சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளானது வரும் 10ம் தேதி வரை தொடர்ந்து நடைபெற உள்ளது. இதில் காவல்துறையினர் வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு நோட்டீஸ்களை வழங்குதல், சாலை விதிகளை மதித்து வருபவர்களுக்கு இனிப்பு மற்றும் பரிசுகள் வழங்குதல், உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வுகளைத் தொடர்ந்து செய்ய உள்ளனர்.
இதையடுத்து, கோவை மாவட்டத்தின் முக்கியச் சந்திப்புகளில் சாலை பாதுகாப்பின் முக்கியத்துவம் குறித்தும், காந்திபுரம் பேருந்து நிலையம் உள்ளிட்ட அனைத்து முக்கிய பேருந்து நிலையங்களிலும் சாலை பாதுகாப்பு தொடர்பான வீதிநாடகங்களும் நடைபெற உள்ளது. இதனிடையே, இன்று நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியை மாநகர காவல் ஆணையாளர் சுமித்சரண் ஐபிஎஸ் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.

இந்த பேரணியில் 300க்கும் மேற்பட்ட மாநகர காவல்துறையினர் வ.உ.சி மைதானத்திலிருந்து, அண்ணா சிலை சாலை வழியாக சென்று ஆர்டிஓ ஆபீஸ் சாலை வழியாக சென்று, திரும்பி மீண்டும் வ.உ.சி மைதானத்தில் பேரணியை முடித்தனர். இந்த பேரணியின் போது காவல்துறையினர் சாலைவிதிகளை மதிப்போம், ஹெல்மெட் அணிந்து வாகனங்களை ஓட்டுவோம், செல்போன் பேசிக்கொண்டே வாகனத்தை ஓட்டுவதைத் தவிர்ப்போம், சாலை பாதுகாப்பு உயிர் பாதுகாப்பு,என பல விழிப்புணர்வு பதாகைகளை ஏந்திச் சென்றனர்.

மேலும், இந்த விழிப்புணர்வு பேரணியில் கோவை மாநகர காவல் துணை ஆணையர் (போக்குவரத்து) சுஜித் குமார் ஐ.பி.எஸ் கூறியதாவது :- கோவை மாநகர போக்குவரத்து காவல்துறையினர் தொடர்ந்து சாலை பாதுகாப்பை வலியுறுத்தி வருகின்றனர். இப்படி தொடர்ந்து சாலை பாதுகாப்பை வலியுறுத்துவதன் மூலம் விபத்துக்களின் எண்ணிக்கை குறைகிறது. மேலும், இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை மாநகர காவல் துறையினர் அனைவரும் இணைந்து செய்து வருகிறோம்.
அதேபோலவே, போலீஸ் இ-ஐ ஆப் மூலம் பொதுமக்கள் சாலை விதிகளை மதிக்காமல் வாகனம் ஓட்டி வருபவர்கள் குறித்த புகார்களை அளித்து வருகின்றனர். இந்த ஆப் ஆனது பொதுமக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தினமும் நூற்றுக்கும் மேற்பட்ட புகார்கள் வருகிறது. தொடர்ந்து சாலை விதிகளை மதிக்காமல் செயல்படுபவர்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகிறோம்," என்றார்.
இந்நிகழ்ச்சியில், போக்குவரத்து துணை ஆணையாளர் சுஜித் குமார் ஐபிஎஸ் மற்றும் சட்டம் ஒழுங்கு துணை ஆணையாளர் டாக்டர். எல் பாலாஜி சரவணன் உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் பலர் கலந்து கொண்டனர்.