கோவை : உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சார்பில் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை பொதுமக்களுக்கு ஏற்படுத்தும் வகையிலான பிரச்சார வேன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
கோவை : உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சார்பில் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை பொதுமக்களுக்கு ஏற்படுத்தும் வகையிலான பிரச்சார வேன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் சர்வதேச புற்றுநோய் தினம் இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு சர்வதேச புற்றுநோய் கட்டுப்பாட்டு சங்கம் சார்பில் 'ஐ ஏம் அன்ட் ஐ வில்' (I Am and I Will) என்ற தலைப்பில் புதிய புற்றுநோய் விழிப்புணர்வு பிரச்சாரம் தொடங்கப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சார்பில் விழிப்புணர்வு வேன் பிரச்சாரம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அம்மருத்துவமனையின் கருத்தரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட சட்டம் மற்றும் ஒழுங்கு காவல் துணை கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன், கொடியசைத்து வேன் விழிப்புணர்வு பிரச்சாரத்தை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் ஆர். விஜயகுமார், இணை நிர்வாக அறங்காவலர் டி. லஷ்மிநாராயணசாமி, ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்வி நிறுவனத்தின் ஆன்காலஜி மற்றும் ஆராய்ச்சி துறையின் இயக்குநர் டாக்டர் பி. குகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
"நாள்தோறும் 26,000 பேர் என்ற வீதத்தில், கடந்த 2018-ம் ஆண்டில் உலக அளவில் 9.5 மில்லியன் மக்கள் புற்றுநோயால் உயிரிழந்துள்ளனர். மேலும், இந்த எண்ணிக்கை வரும் காலங்களில் அதிகரிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது," என்கிறார் டாக்டர் பி. குகன்.
இதனிடையே, மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- டிஜிட்டல் விழிப்புணர்வு வேனில் ஆண்ட்ராய்டு எல்.இ.டி. திரை பொருத்தப்பட்டுள்ளது. மேலும், தண்ணீரிலும் ஏதுவும் ஆகாத வகையிலான ஒலிபெருக்கிகள் வைக்கப்பட்டுள்ளது. மேலும், வை-பை வசதியுள்ள இந்த விழிப்புணர்வு வேனில், பொதுமக்களுக்கு ஏற்றவாறு, யூ-டியூப், இ-புக்ஸ், இணையதளங்கள், ஆண்ட்ராய்டு அப்ளிகேசன்ஸ், அனிமேட்டேடு வீடியோக்கள் ஒளிக்கப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.
மேலும், மைக்ரோபோன் பொருத்தப்பட்டு, கூகுள் பிளே ஸ்டோரில் ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்வி நிறுவனத்தின் ஆன்காலஜி மற்றும் ஆராய்ச்சி துறையின் சார்பில் உருவாக்கப்பட்டுள்ள மார்பக புற்றுநோய் மற்றும் புகையிலை பழக்கத்தைத் தடுப்பது போன்ற விழிப்புணர்வு ஆப்களை எவ்வாறு பயன்படுத்துவது என்பது பற்றி பொதுமக்களிடம் விளக்கப்படுகிறது. இந்த விழிப்புணர்வு வேனை தொடர்பு கொள்ள 93442 75008 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம், எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.