திருப்பூர் : திருப்பூரில் ஜாக்டோ - ஜியோ போராட்டத்தில் கலந்துகொண்ட ஆசிரியருக்கு பணிமாறுதல் அளிக்கப்பட்ட நிலையில், ஆசிரியரை விட மறுத்து மாணவ, மாணவிகள் போராட்டம் நடத்தினர்.
திருப்பூர் : திருப்பூரில் ஜாக்டோ - ஜியோ போராட்டத்தில் கலந்துகொண்ட ஆசிரியருக்கு பணிமாறுதல் அளிக்கப்பட்ட நிலையில், ஆசிரியரை விட மறுத்து மாணவ, மாணவிகள் போராட்டம் நடத்தினர்.

9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர்கள் உட்பட அரசு ஊழியர்கள் கடந்த வாரம் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தைக் கைவிட்டு பணிக்கு திரும்பாவிட்டால் பணிநீக்கம் செய்யப்படுவார்கள் உள்ளிட்ட பல்வேறு எச்சரிக்கைகளைத் தொடர்ந்து போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. இதையடுத்து, ஜாக்டோ - ஜியோ போராட்டத்தை முடித்துக்கொண்டு, ஆசிரியர்கள் பணிக்கு திரும்பினர்.

இந்த நிலையில், திருப்பூர் வெள்ளியங்காடு அரசு நடுநிலைப்பள்ளியில் 8-ஆம் வகுப்பு ஆசிரியராக இருந்து வரும் சுரேஷ் என்பவரை பெரிச்சிபாளையம் பள்ளிக்கு பணியிட மாற்றம் செய்து கல்வித்துறை உத்தரவிட்டிருந்தது. இதனையடுத்து, உத்தரவு நகலை பெற பள்ளிக்கு வந்த ஆசிரியர் சுரேசை, அவர்களது மாணவ, மாணவிகள் சூழ்ந்துகொண்டனர். பின்னர், கண்ணீர் மல்க அழுது, அவரை விடமறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து, ஆசிரியர் சுரேசை பணிமாறுதல் செய்யக்கூடாது என வலியுறுத்தி சில மாணவர்களின் பெற்றோர்கள் இணைந்து மாவட்ட ஆட்சியரிடமும் மனு அளித்தனர்.