கோவை : நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் பா.ஜ.க.விற்கு நல்ல வாய்ப்பு உள்ளதாக கோவையில் நடைபெற்ற பா.ஜ.க. ஆலோசனைக் கூட்டத்தில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
கோவை : நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் பா.ஜ.க.விற்கு நல்ல வாய்ப்பு உள்ளதாக கோவையில் நடைபெற்ற பா.ஜ.க. ஆலோசனைக் கூட்டத்தில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

கோவையை அடுத்த ஈச்சனாரியில் கோவை, பொள்ளாச்சி, நீலகிரி, திருப்பூர் ஆகிய நான்கு நாடாளுமன்ற தொகுதி பூத் கமிட்டி உறுப்பினர்களுடனான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில், மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டார். இதைத் தொடர்ந்து, நிகழ்ச்சி முடிந்த பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது, அவர் பேசியதாவது :- 2019 நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக கட்சி தொண்டர்களுக்கு பூத் அளவில் செய்ய வேண்டிய தேர்தல் தொடர்பான வேலைகள், மக்களுக்கு இந்த அரசு செய்துள்ள செயல்பாடுகளையும், திட்டங்களையும் தொண்டர்களுக்கு எடுத்துக் கூறினேன். நாடாளுமன்ற கூட்டணி பற்றி சொல்ல என்னிடம் ஒன்றும் இல்லை. கூட்டணி குறித்த அதிகாரம் மாநில நிர்வாகிகளிடம் உள்ளது.
ரபேல் போர் விமான விவகாரத்தில் ஊழல் எனக் கூறி எதிர்க்கட்சிகள் பிரச்சாரத்தில் ஈடுபட்டால், நாங்கள் உண்மையைக் கூறி, அதனைப் பொய் பிரச்சாரம் என நிரூபிப்போம். சி.பி.ஐ. இயக்குநர் நியமிக்கும் நடைமுறைக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஒத்துழைப்பு அளிக்காமல், தற்போது நியமித்த பிறகு வீணாக குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகிறார்.
தேர்தலுக்கு முன்பாக இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்ய எல்லா உரிமையும் அரசுக்கு உள்ளது. மக்களுக்கு உகந்த அம்சங்கள் இருப்பதால், அதனை ஜீரணிக்க முடியாமல், வேறுவாதம் இல்லாததால், இதனை தேர்தல் அறிக்கை என விமர்சிக்கின்றனர். நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் பா.ஜ.க.,விற்கு நல்ல வாய்ப்பு உள்ளது.
விவசாயிகளுக்கு ரூ. 6,000 வழங்குவது விவசாயிகளை சிறுமைப்படுத்தும் செயல் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சுமத்தி இருக்கும் குற்றச்சாட்டிற்கு, அவர் விளக்கம் அளிக்க வேண்டும். மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த உடன் உரத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. நாடு முழுவதும் இல்லாத தட்டுப்பாடு, அங்கு மட்டும் எப்படி வந்தது..? என்பதை ராகுல் காந்தி பார்க்க வேண்டும்.
மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, பா.ஜ.க. வளர்ச்சி குறித்து கவலையடைந்துள்ளார். பிரதமர் மோடி கூட்டத்திற்கு வந்தவர்களை அம்மாநில அரசு தடுத்து நிறுத்தியது. கேரளா மாதிரியே பா.ஜ.க. தொண்டர்கள் தாக்கப்படுவது அதிகரித்துள்ளது. மேற்கு வங்காளம் ஒரு சவாலான தேர்தல் களமாக உள்ளது.
ஜி.எஸ்.டி. வரிப்பணத்தை மத்திய அரசு நிறுத்தி வைப்பதாகக் கூறுவதை ஆதாரமற்ற குற்றச்சாட்டாகும். ஜி.எஸ்.டி மூலம் மாநில அரசுக்கு இழப்பு என்றால், மத்திய அரசு அதனை சரிகட்டும் என நிதியமைச்சர் (பொ) பியூஷ் கோயல் பட்ஜெட்டில் கூறியுள்ளார். ஜல்லிக்கட்டு நடக்காமல் இருந்ததற்கு காளைகளை விலங்கின பட்டியலை சேர்த்தது தான் காரணம். அவ்வாறு செய்தது அப்போது ஆட்சியில் இருந்த காங்கிரஸ் மற்றும் தி.மு.க. உள்ளிட்ட கூட்டணி கட்சிகள்தான். எங்களை கேளுங்கள் பதில் சொல்வோம், அதுபோல தி.மு.க., மற்றும் காங்கிரசிடமும் கேளுங்கள்.
ஜி.எஸ்.டி.க்குள் பெட்ரோலியம் வர வேண்டும் என்பதுதான் எங்கள் விருப்பம். அதை எதிர்ப்பவர்களிடம் போய் கேளுங்கள். ஜி.எஸ்.டி கவுன்சிலில் பல மாநிலங்கள் அதை எதிர்க்கிறார்கள்.

பிரதமருக்கு எதிராக கறுப்புக்கொடி போராட்டங்கள் நடத்தப்படுவது தமிழகத்திற்கு நல்லதல்ல. ஜனநாயம் பெயரை வைத்துக்கொண்டு எல்லாவற்றுக்கும் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். எதிர்ப்பு தெரிவிக்கும் போது, யாருக்கு..? எதற்காக..? கருப்பு கொடி காட்டுகிறோம் என்பதை தெரிந்து காட்ட வேண்டும். கருப்பு கொடி காட்டும் அளவிற்கு முக்கிய பிரச்சனை என்றால், எதிர்க்கட்சிகள் அது குறித்து கேள்வி கேட்டு பதில் பெற வேண்டும். அவ்வாறு இல்லாம், கருப்பு கொடி காட்டுகின்றனர். தமிழகத்தில் இவர்கள் கருப்பு கொடி காட்டுவார்கள். வெறும் கருப்பு கொடியை காட்டிவிட்டு, பின்னர் வீட்டில் போய் உட்கார்ந்து விட்டால், ஒன்றும் நடக்காது. இது தமிழகத்தின் இமேஜை தான் பாதிக்கும், என தெரிவித்தார்.
மேலும், ஒவ்வொருவர் வங்கிக் கணக்கிலும் ரூ. 15 லட்சம் போடுவதாக பிரதமர் மோடி அறிவித்தது என்ன ஆனது..? என்ற கேள்விக்கு, பிரதமர் மோடி அவ்வாறு கூறினார் என்பதற்கான ஆதாரம் இருந்தால் கொடுங்கள் பதில் கூறுகிறேன், என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.