கோவை : யானை வழித்தடங்கள் குறித்த அறிக்கையை மேற்கு தொடர்ச்சி மலை உயிர்ச்சூழல் மாநாட்டு குழு, தமிழக அரசிடம் சமர்ப்பிக்க இருக்கிறது.
கோவை : யானை வழித்தடங்கள் குறித்த அறிக்கையை மேற்கு தொடர்ச்சி மலை உயிர்ச்சூழல் மாநாட்டு குழு, தமிழக அரசிடம் சமர்ப்பிக்க இருக்கிறது.
மேற்கு தொடர்ச்சி மலை உயிர்ச்சூழல் திருவிழா மற்றும் தேசிய மாநாடு கோவையில் கடந்த 1-ம் தேதி ஸ்ரீ கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் தொடங்கியது. 2-வது நாள் நிகழ்ச்சியில், அனுபவ வல்லுநர்கள், அறிவியலாளர்கள் மற்றும் வன அதிகாரிகள் கலந்து கொண்டு முக்கிய விவகாரங்கள் குறித்து விவாதம் நடத்தினர்.
அப்போது, இந்திய வன உயிரின அறக்கட்டளையைச் சேர்ந்த கே.ராம்குமார், ஆசிய யானைகள் சிறப்புக் குழுவின் உறுப்பினர் அஜய் தேசாய், ஏ.ஜே.டி. ஜான்சிங், உதகை கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் வன உயிரியல் துறையின் பேராசிரியர் பி. ராமகிருஷ்ணன், கோவை வனப் பகுதியின் கவுரவ வன வார்டன் சி. பத்ரசாமி, சத்யமங்கலம் புலிகள் காப்பக கள இயக்கநர் வி. நாகநாதன் ஆகியோர் அடங்கிய குழுவினர் 14 யானைகள் வழித்தடம் பற்றி விளக்கினர்.
மேலும், இந்த வல்லுநர் இணைந்து மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் உள்ள ஒவ்வொரு யானைகள் வழித் தடத்தினையும், அதில் உள்ள பிரச்சனைகள் பற்றியும் விரிவாக ஆலோசனை நடத்தினர். அதோடு, யானைகள் வழித்தடத்தை மீட்டெடுக்கும் விவகாரத்தை எவ்வாறு அரசிடம் எடுத்துச் செல்வது பற்றியும் விவாதிக்கப்பட்டது.
"பெரும்பாலான யானைகள் வழித்தடத்தில் கம்பி வேலி அமைத்தல், சுவர் கட்டுதல், அகழிகள், கட்டுமானங்கள் மற்றும் சிறுசிறு குடியிருப்புகளால் ஆக்கிரமிப்புக்கப்பட்டிருப்பது பெரும் பிரச்சனையாக இருக்கிறது. இவற்றை அகற்றினால் மட்டுமே, யானைகள் சுதந்திரமாக நடந்து செல்ல முடியும். யானைகள் சீசனுக்கு ஏற்ப மட்டுமே இடம்பெயருகின்றன. ஒரு குறிப்பிட்ட இடங்களில் மட்டும் யானைகள் நாள்தோறும் இடம்பெயர்கின்றன. அவ்வாறு நடந்து செல்லும் பாதைகள் அடைக்கப்பட்டால், யானைகளின் எண்ணிக்கை குறையும் அபாயம் ஏற்படும்," என்கிறார் ராம்குமார்.
யானைகளின் முக்கிய வழித்தடங்களை பாதுகாப்பதன் மூலம் யானைகள் மட்டும் பிற விலங்குகளின் எண்ணிக்கையை அதிகரிக்க முடியும் என்றார். மேலும், யானை வழித்தடங்கள் குறித்து மேற்கு தொடர்ச்சி மலை உயிர்ச்சூழல் மாநாட்டு குழு சார்பில் தயார் செய்யப்பட்ட அறிக்கை தமிழக அரசிடம் விரைவில் சமர்ப்பிக்க இருக்கிறது.
இதனிடையே, மேற்கு தொடர்ச்சி மலையைப் பாதுகாக்க அரசியல் ரீதியான நடவடிக்கைகள் மிகவும் அவசியம் என மேற்கு தொடர்ச்சி மலைப் பாதுகாப்புக் குழுவின் ஆலோசகர் க்ளவுட் அல்வேர்ஸ் தெரிவித்தார்.
"1,70,000 சதுர கி.மீ. தூரம் கொண்ட மேற்கு தொடர்ச்சி மலையின், சுற்றுச்சூழல் பகுதியை பாதுகாக்க வேண்டும் என மாதவ் காட்கில் அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார். ஆனால், இதனை ஏற்க மறுத்த அரசு, இதனை மீண்டும் ஆய்வு செய்வதற்காக கஸ்தூரிரங்கன் என்ற புதிய கமிட்டியை அமைத்தது. இந்தக் குழு 60,000 சதுர கி.மீ. பரப்பளவே சுற்றுச்சூழல் பகுதி எனக் குறிப்பிட்டுள்ளது. இதுவரை மேற்கு தொடர்ச்சி மலைகளைப் பாதுகாக்கும் விதமாக எந்த சட்டமும் இயற்றப்படவில்லை. எனவே, நீர்த்துப் போன சட்டங்களை அரசு மாற்றியமைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும்," எனக் கூறினார் க்ளவுட் அல்வேர்ஸ்.
வரும் காலத்தில் இயற்கைப் பாதுகாப்பில் முக்கிய பங்காற்றக் கூடிய இளம் தலைமுறையினருக்கு, மேற்கு தொடர்ச்சி மலைப் பாதுகாப்பு குறித்து பாடத்திட்டங்களில் சேர்க்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.