கோவை : உடுமலையில் உலா வரும் சின்னத்தம்பியை கும்கியாக மாற்றும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு கோவையைச் சேர்ந்த மக்களும், வன ஆர்வலர்களும் சமூக வலைதளங்களில் கருத்துக்களைப் பதிவிட்டு வருகின்றனர்.
கோவை : உடுமலையில் உலா வரும் சின்னத்தம்பியை கும்கியாக மாற்றும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு கோவையைச் சேர்ந்த மக்களும், வன ஆர்வலர்களும் சமூக வலைதளங்களில் கருத்துக்களைப் பதிவிட்டு வருகின்றனர்.
விவசாய நிலங்களை சேதப்படுத்தியாக விநாயகன் மற்றும் சின்னத்தம்பி ஆகிய காட்டு யானைகளை பிடித்து, இடமாற்றம் செய்யுமாறு வனத்துறையினருக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து, இந்த இரு யானைகளையும் இடமாற்றம் செய்ய வனத்துறையினர் முடிவு செய்து, அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டனர். வனத்துறையினரின் இந்த நடவடிக்கைக்கு விவசாயிகள் வரவேற்பு தெரிவித்தாலும், பொதுமக்கள் மற்றும் வன ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்த நிலையில், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், முதற்கட்டமாக, விநாயகன் பிடிக்கப்பட்டு முதுமலையில் கொண்டு சென்று விடப்பட்டது. விநாயகனின் கழுத்தில் ஜி.பி.எஸ். கருவி பொருத்தப்பட்டு, அதன் நடமாட்டம் கண்காணிக்கப்பட்டது. அதில், விநாயகன் அங்கு வாழ்ந்து வரும் யானைக் கூட்டங்களுடன் ஐக்கியமானது. இதனால், சொந்த மண்ணை விட்டு வெளியேற்றப்பட்டாலும், புது குடும்பங்களுடன் கூடி வாழும் விநாயகனைக் கண்டு கோவை மக்கள் துயரம் கலந்த மகிழ்ச்சியடைந்தனர்.

இதைத் தொடர்ந்து, கடந்த வாரம் சின்னத்தம்பியை வனத்துறையினர் மிகவும் போராடி பிடித்தனர். கும்கி யானைகளின் ஆக்ரோஷமான முட்டல்களும், மோதல்களுக்கும் மத்தியில் சின்னத்தம்பி, ரத்த காயங்களுடன், தந்தங்கள் உடைக்கப்பட்டு, லாரியின் மூலம், டாப்ஸ்லிப் வரகளியாறு பகுதிக்கு இடமாற்றம் செய்யப்பட்டது.
இதையடுத்து, தனது சொந்த இருப்பிடத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட மீளாத சின்னத்தம்பி, கடந்த இரு தினங்களாக பொள்ளாச்சி, அங்கலக்குறிச்சி கிராமத்துக்குள் நுழைந்து, தனது வாழ்விடத்துக்குச் செல்ல முயற்சி செய்து வருகிறது.
சின்னத்தம்பியை வனத்துறையினரும் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். சுமார் 100 கிலோ மீட்டர் தொலைவுகளை கடந்து நடந்து சென்ற சின்னத்தம்பி, வழித்தடங்களில் பல்வேறு இடர்பாடுகள் இருந்தாலும், குடியிருப்புகள், விவசாய நிலங்கள் என எங்கும் எதிலும், எந்தவிதச் சேதத்தையும் ஏற்படுத்தவில்லை. பொதுவாக, வெடி வெடித்து மிரட்டுதல், தீப்பந்தம் கொளுத்தி துரத்துதல் போன்ற செயல்பாடுகளினால் ஆத்திரமடையும் காட்டு யானைகளுக்கு மத்தியில், சின்னத்தம்பி, உடுமலை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதி பொதுமக்களிடம் எந்தவிதமான கோபத்தையும் காட்டாமல் சாந்தமாக பயணம் செய்து வருகிறான். இது வனத்துறையினரிடையே ஆச்சர்யத்தில் ஏற்படுத்தியது.

இருப்பினும், சின்னத்தம்பியை வனப்பகுதிக்குள் விரட்டுவதற்காக வனத்துறையினர் தொடர்ந்து முயற்சி செய்து வருகின்றனர். ஆனால், அனைத்து நடவடிக்கைகளும் தோல்வியில் தான் முடிவடைந்தன. இந்த நிலையில், மடத்துக்குளம் அருகே இன்று சின்னத்தம்பி மயக்கம் போட்டு விழுந்திருப்பது அனைவரிடத்திலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து பல கிலோ மீட்டருக்கு இடைவெளி இல்லாமல் நடந்து கொண்டிருக்கும் சின்னத்தம்பிக்கு மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பட வேண்டும் என கோவை மற்றும் உடுமலை மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும், காட்டு யானைகளின் பொதுவான குணாதியசங்களை வைத்து சின்னத்தம்பியை விரட்டப் போராடி வரும் உடுமலை வனத்துறையினருக்குப் பதிலாக, சின்னத்தம்பியைப் பற்றி நன்கு தெரிந்த கோவை வனத்துறையினரை வைத்து சின்னதம்பியைக் கண்காணிக்க வேண்டும் என்று சூழலியல் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதனிடையே, சின்னத்தம்பி யானையைக் கூண்டில் அடைத்து கும்கி யானையாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என கோவையில் நடைபெற்று வரும் மேற்கு தொடர்ச்சி மலை பாதுகாப்பு குறித்து சூழியல் மாநாடு அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் அறிவித்தார். அமைச்சரின் இந்த அறிவிப்பிற்கு கோவையைச் சேர்ந்த பொதுமக்களும், வன ஆர்வலர்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
அதன் வாழ்விடத்தை பிரித்துச் சென்றதால், அதனை தாங்க முடியாத மனநிலையில், உணவு கூட உண்ணாமல் 100 கி.மீ. நடந்தே சுற்றித்திரியும் சின்னத்தம்பியை கும்கியாக மாற்றக் கூடாது எனக் கூறி சமூக வலைதளங்களிலும், வாட்ஸ்-அப்-களிலும் பொதுமக்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். குறிப்பாக, இதுபோன்ற மனநிலையில் இருக்கும் யானையை, கூண்டில் அடைத்து வைத்து, கும்கியாக மாற்ற முயற்சிகள் மேற்கொண்டால், அதன் உயிருக்கும் பாதிப்பு ஏற்படும் என வனஆர்வலர்கள் அச்சத்தைத் தெரிவிக்கின்றனர்.

பெரும்பாலோனோர் சின்னத்தம்பியை மீண்டும் வனப்பகுதிக்குள்ளேயே விரட்டி விட வேண்டும் என்றும், சின்னத்தம்பியை கும்கியாக மாற்றும் நடவடிக்கையை அரசு கைவிட வேண்டும் என வலியுறுத்தி தங்களது கருத்துக்களைப் பதிவிட்டு வருகின்றனர். எனவே, மக்களின் விருப்பத்திற்கேற்ற நடவடிக்கைகளை அரசும், வனத்துறையினரும் மேற்கொள்ள வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாக உள்ளது.