திருப்பூர் : உடுமலை அருகே சொந்த இருப்பிடத்தை தேடி அலைந்து திரிந்து வரும் காட்டு யானை சின்னத்தம்பி, மடத்துக்குளம் அருகே மயக்கமடைந்து விழுந்த சம்பவம் கோவை மக்கள் மற்றும் வன ஆர்வலர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் : உடுமலை அருகே சொந்த இருப்பிடத்தை தேடி அலைந்து திரிந்து வரும் காட்டு யானை சின்னத்தம்பி, மடத்துக்குளம் அருகே மயக்கமடைந்து விழுந்த சம்பவம் கோவை மக்கள் மற்றும் வன ஆர்வலர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை தாடகம் பகுதியில் விளைநிலங்களை சேதப்படுத்தி வருவதாகக் கூறி, விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, காட்டு யானை சின்னத்தம்பி, கடந்த வாரம் வனத்துறையினரால் பிடிக்கப்பட்டது. பின்னர், பொள்ளாச்சி அடுத்த டாப்சிலிப் அருகே உள்ள வரகலியாரு வனப்பகுதியில் கொண்டு சென்று விடப்பட்டது. இந்த நிலையில், கடந்த 2 தினங்களாக, தனது சொந்த இருப்பிடத்தை தேடி அலையும் காட்டு யானை சின்னத்தம்பி, பொள்ளாச்சி அருகே உள்ள அங்கலகுறிச்சி, ஜெ.ஜெ. நகர், பொங்காலியூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் வழியாக உலா வந்து கொண்டிருக்கிறது.
இதையடுத்து, பட்டாசு வெடித்தும், தீப்பந்தம் கொளுத்தியும் சின்னத்தம்பியை வனப்பகுதியில் விரட்டும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வந்தனர். சின்னத்தம்பிக்கு ஜி.பி.எஸ்., கருவி பொருத்தப்பட்டு உள்ளதால், இணையதளம் மூலம் அதனை வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர். இதனையடுத்து, 30 பேர் கொண்ட வனத்துறையினர் மூன்று குழுக்களாகப் பிரிந்து யானையை வனப்பகுதியில் விரட்டும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.
நேற்று உடுமலை அருகே சின்னபாப்பனூத்து, சாலையூர் உள்ளிட்ட கிராமங்களில் புகுந்த யானை விவசாய நிலங்களில் முகாமிட்டிருந்தது. உடுமலை வனத்துறையினரும் சின்னத்தம்பியை விரட்டும் ஆபரேசனில் இணைந்தனர்.
இருப்பினும், பலமணி நேரம் போராட்டம் வீணானது. இரவு நேரம் ஆனதால், சின்னத்தம்பி ஆபரேசன் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. ஆனால், தனது பயணத்தை நிறுத்தாத சின்னத்தம்பி, இரவில் மடத்துக்குளம், கிருஷ்ணாபுரம் பகுதியில் முகாமிட்டது.
இந்த நிலையில், இன்று சுமார் 2 மணியளவில், சின்னத்தம்பி யானை, திடீரென மயங்கி விழுந்துள்ளது. இதனால், பொதுமக்களும், வனத்துறையினரும் அதிர்ச்சியடைந்தனர். இருப்பினும், பல நீண்ட தூரம் நடந்ததால், ஏற்பட்ட சோர்வின் காரணமாக, சின்னத்தம்பி படுத்து ஓய்வெடுப்பதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.
ஆனால், நீண்ட தூரம் நடந்திருந்தாலும், அதனை விரட்டும் முயற்சிக்காக பட்டாசு வெடித்தல், தீப்பந்தம் கொளுத்துதல் போன்ற அழுத்தங்களினால், சின்னத்தம்பி மயங்கி விழுந்ததாகப் பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். ஆனால், மக்களின் இந்தக் கருத்திற்கு வனத்துறையினர் மறுப்பு தெரிவித்துள்ளனர்.
வனத்துறையினர், பொதுமக்கள் என மாறிமாறி இருவேறு கருத்துக்கள் வெளி வந்தாலும், அதன் செயல்பாடுகள் குறித்து தொடர்ந்து அறிந்து வரும் மக்கள், உடனடியாக சின்னத்தம்பிக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
சொந்த தாயகமான கோவையை விட்டு வெளியேற்றப்பட்ட துயரத்தில் வாடி வரும் சின்னத்தம்பி, தற்போது மயங்கி விழுந்துள்ள சம்பவம் கோவை மக்கள் மற்றும் வன ஆர்வலர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.