கோவை : சட்டவிரோதமாக நடைபாதையை ஆக்கிரமித்து வைத்துள்ள பேனர்களை அகற்றும் வரை காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடுவேன் எனச் சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி, அதிமுக அலுவலகம் முன்பு காத்திருப்பில் உள்ளார்.
கோவை : சட்டவிரோதமாக நடைபாதையை ஆக்கிரமித்து வைத்துள்ள பேனர்களை அகற்றும் வரை காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடுவேன் எனச் சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி, அதிமுக அலுவலகம் முன்பு காத்திருப்பில் உள்ளார்.

கோவை புறநகர் - மாநகர் மாவட்டத்தின் சார்பில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டம் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் நடைபெறவுள்ளது. இதையடுத்து, துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், சட்டமன்ற உறுப்பினர்கள் பி.ஆர்.ஜி.அருண்குமார், அம்மன் அர்ஜூணன், ஒ.கே.சின்ன்ராஜ், ஆறுகுட்டி, எட்டிமடை சண்முகம், கனகராஜ், கஸ்தூரி வாசு, நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஏ.கே.செல்வராஜ், மகேந்திரன், ஆகியோர் கொண்ட பிளக்ஸ் பேனர் அதிமுக அலுவலகம் முன்பு வைக்கப்பட்டுள்ளது.

கோவை அதிமுக அலுவலகம் முன்பு வைக்கப்பட்டுள்ள இந்த பேனர்களை அகற்றும் வரை, காத்திருப்பு போராட்டம் நடத்த உள்ளதாகக் கூறி சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி கோவை ஹூசூர் சாலையில் உள்ள அதிமுக அலுவலகம் முன்பு காலை 9.30 முதல் காத்திருப்பில் உள்ளார்.
இது பற்றி டிராபிக் ராமசாமி கூறும் போது, ஆளும் கட்சி பேனர்களை அகற்றும் செய்ய தயக்கம் காட்டுவதாகவும், இதனை உடனடியாக அகற்றாவிட்டால் அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர உள்ளதாகவும் கூறினார். இதனைத் தொடர்ந்து சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமியுடன் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி அவரைச் சமாதானம் செய்ய முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், நேற்று உயர்நீதிமன்ற உத்தரவுப்படி, கோவை மாநகராட்சி பகுதிகளில் 40 இடங்களில் விதிமுறைகளை மீறி வைக்கப்பட்ட பேனர்கள் அகற்றப்பட்டு, வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.