கோவை: கோவை அருகே பிஎஸ்ஜி கிராமப்புற மருத்துவமனையில் மருத்துவர்கள் இல்லை என்று கர்ப்பிணி பெண்ணை வெளியேற்றியதால் சாலையிலேயே குழந்தை பெற்ற துயரமான சம்பவம் அரங்கேறியது.
கோவை: கோவை அருகே பிஎஸ்ஜி கிராமப்புற மருத்துவமனையில் மருத்துவர்கள் இல்லை என்று கர்ப்பிணி பெண்ணை வெளியேற்றியதால் சாலையிலேயே குழந்தை பெற்ற துயரமான சம்பவம் அரங்கேறியது.
கோவை வேடபட்டி அருகே பி.எஸ்.ஜி மருத்துவக்கல்லூரியின் கிளையான கிராமப்புற மருத்துவமனை இயங்கி வருகிறது. இந்நிலையில் நாகராஜபுரம் பகுதியிலுள்ள உறவினர் வீட்டிற்கு திருவாரூர் மகாதேவிபட்டினத்தை சேர்ந்த விஜயின் மனைவி அஞ்சலி (22) என்பவர் நேற்றைக்கு வந்துள்ளார். கர்ப்பிணியான அஞ்சலிக்கு இன்று காலை 5 மணியளவில் பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து அருகே உள்ள தனியார் மருத்துவக்கல்லூரியின் கிராமப்புற மருத்துவமனைக்கு அஞ்சலியை அழைத்து சென்றுள்ளனர். அங்கு மருத்துவர் இல்லாத காரணத்தால், செவிலியர்கள் அரசு மருத்துவமனைக்கு கூட்டிச்செல்ல அறிவுறுத்தியுள்ளனர். ஆனால் அஞ்சலியைக் கூட்டிக்கொண்டு மருத்துவமனைக்கு வெளியே வந்தவுடன் பிரசவ வலியால் துடித்துள்ளார்.
இந்நிலையில் மருத்துவமனையின் அருகில் பெட்டிக்கடை வைத்திருக்கும் லட்சுமி என்ற மூதாட்டி அஞ்சலிக்கு வேடபட்டி தொண்டாமுத்தூர் சாலையிலேயே வைத்து பிரசவம் பார்த்துள்ளார். அங்கு அஞ்சலிக்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது.
இதனையடுத்து தாயும், சேயும் 108 அவசர ஊர்தி மூலம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். சாலையில் குழந்தை பிறந்ததை அடுத்து மருத்துவமனையில் இருந்த செவிலியர்களிடம் பொது மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

"தனியார் மருத்துவமனை என்றாலும் அவசரத்திற்கு சிகிச்சை கொடுப்பது மனித மாண்பு, ஆனால் அதை விட்டுவிட்டு பிரசவ வலியில் துடிக்கும் ஒரு கர்ப்பிணியை பரிசோதனை கூட செய்யாமல் வெளியேற்றுவது மனிதத்தன்மையற்ற செயல்", என பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
தேசிய அளவில் மருத்துவத்துறையில் முன்னிலையில் இருக்கும் தமிழ்நாட்டில் ஆங்காங்கே ஒவ்வொரு மூலையிலும் அடிக்கடி கர்ப்பிணி பெண்களின் குமுறல்கள் இருந்து கொண்டுதான் இருக்கின்றன.
ஆபத்தான சூழலில் வரும் கர்ப்பிணி பெண்ணை மருத்துவர்கள் இல்லை என்று கூறி மருத்துவமனைகள் வெளியேற்றுவது சட்டப்படி குற்றமா இல்லையா? என்பதை விட, இது மனிததன்மையா என்பதை யோசிக்க வேண்டிய நிலை உள்ளது. அதே சமயம், மருத்துவர்கள் துணை இல்லாமல் செவிலியர்கள் பிரசவம் பார்ப்பதும் ஆபத்தானது.
இரவு நேரங்களில் மருத்துவர்கள் இந்த மருத்துவமனையில் இருக்க மாட்டார்கள் என்பதை பொதுமக்கள் அறிந்திருந்தால் நேரடியாக அவசர நிலையைப் புரிந்து அரசு மருத்துவமனைகளுக்குகே செல்வார்கள். அந்த தகவல் தெரியாததால், தேவையற்ற கால தாமதங்கள் மற்றும் இது போன்ற சம்பவங்கள் அரங்கேற காரணமாகிவிடுகிறது.