கோவை : கோவையில் செயல்படுத்தப்பட்டு வரும் 24 மணி நேர குடிநீர் திட்டத்திற்கு பன்னாட்டு நிறுவனமான சூயஸ் நிறுவனம் தேவையா, என ஊழலுக்கு எதிரான ஆர்வலர்களின் கூட்டமைப்பு கேள்வி எழுப்பியுள்ளது.
கோவை : கோவையில் செயல்படுத்தப்பட்டு வரும் 24 மணி நேர குடிநீர் திட்டத்திற்கு பன்னாட்டு நிறுவனமான சூயஸ் நிறுவனம் தேவையா, என ஊழலுக்கு எதிரான ஆர்வலர்களின் கூட்டமைப்பு கேள்வி எழுப்பியுள்ளது.
கோவையைச் சேர்ந்த பல்வேறு ஊழல் எதிர்ப்பு இயக்கங்கள் ஒன்றிணைந்து உருவாக்கப்பட்டுள்ள கூட்டமைப்பின் சார்பாக சூயஸ் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ள 24 மணி நேர குடிநீர் திட்டம் குறித்த பத்திரிகையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது.

இதில் சமூக செயற்பாட்டாளர் ட்ராஃபிக் ராமசாமி கலந்துகொண்டு, கோவை மாநகராட்சியால் சூயஸ் நிறுவனத்தினரிடம் செய்யப்பட்டுள்ள குடிநீர் திட்டத்திற்கு எதிராக வழக்குத் தொடுக்கப்படும் எனத் தெரிவித்தார். அதற்கு முன்னதாக, வழக்கறிஞர் மற்றும் தகவல் அறியும் உரிமைச் சட்ட ஆர்வலர் லோகநாதன், சூயஸ் நிறுவனத்துடன் போடப்பட்டுள்ள ஒப்பந்தத்தில் உள்ள விதிமீறல்கள் குறித்து விரிவாக விளக்கினார்.

இக்கூட்டத்தில் லோகநாதன் பேசுகையில், "2015 -ம் ஆண்டில் அனைத்து கட்சிகளை சேர்ந்த மாமன்ற உறுப்பினர்களின் ஒப்புதலோடு 24 மணி நேர குடிநீர் திட்டத்திற்கான தீர்மானம், மாநகராட்சி மாமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து திட்டத்திற்கான டெண்டர் விளம்பரங்கள் நாளிதழ்களில் வெளியிடப்பட்டன. அரசு விதிகளில் ஒன்றான, 75 கோடிக்கு மேல் மேற்கொள்ளப்படும் திட்டத்திற்கு இந்திய வர்த்தக பத்திரிக்கையில் விளம்பரம் வெளியிடப்பட வேண்டும் என்ற விதி மீறப்பட்டுள்ளது.
மேலும், தொடக்கத்தில் 595 கோடி மதிப்பீட்டில் இருந்த திட்டத்தை தற்போது 2900 கோடிக்கு நிறைவேற்றியுள்ளது சந்தேகங்களை எழுப்புகிறது. இதனிடையே, ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள சூயஸ் நிறுவனம் 24 மணி நேர குடிநீர் திட்டத்தை உலக அளவில் பல்வேறு நாடுகளிலும், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் அமல்படுத்தி தோல்வியை சந்தித்துள்ளது. இப்படிப்பட்ட நிறுவனத்திடம் மக்களின் அடிப்படை ஆதாரமான குடிநீரை தாரை வார்ப்பது வருங்காலத்தில் மக்களின் வாழ்வாதாரத்திற்கே அச்சுறுத்தலாக உருவாகிவிடும் என கருதப்படுகிறது.
இதுவரை பணிபுரிந்து வரும் குடிநீர் வடிகால் மற்றும் விநியோக ஊழியர்கள் 24 மணி நேர குடிநீர் திட்டத்திற்குத் தகுதியானவர்கள் இல்லை என்ற காரணத்தைக் கூறி பன்னாட்டு நிறுவனத்திடம் இத்திட்டத்தைக் கோவை மாநகராட்சி ஒப்படைத்திருப்பது ஏற்புடையதாக இல்லை, கவர்ச்சியான பெயர்களை வைத்து கோவையின் நீர் ஆதாரத்தைப் பாதிக்கும் வகையில் இத்திட்டம் சூயஸ் நிறுவனத்தினரால் செயல்படுத்தப்படவுள்ளது," என்றார்.
இக்கூட்டத்தில், சிட்டிசன் வாய்ஸ் அமைப்பைச் சேர்ந்த ஜெயராமன், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில செயலாளர் கந்தசாமி, ஊழல் எதிர்ப்பு இயக்கத்தின் செயலாளர் வேலு, ஓய்வுபெற்ற வருவாய் அலுவலர்கள் சங்கத்தின் புருஷோத்தமன், பாரதிநகர் குடியிருப்போர் நலசங்கத்தைச் சேர்ந்த டாக்டர்.அனுவாலண்டினா மற்றும் பல்வேறு தன்னார்வ அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.