கோவை : காந்திபுரம் பகுதியில் பல கோடி ரூபாய் மோசடி செய்த நிதி நிறுவனத்திடம் இருந்து பணத்தை திரும்பப் பெற்று தரக்கோரி, வாடிக்கையாளர்கள் நிதி நிறுவன அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை : காந்திபுரம் பகுதியில் பல கோடி ரூபாய் மோசடி செய்த நிதி நிறுவனத்திடம் இருந்து பணத்தை திரும்பப் பெற்று தரக்கோரி, வாடிக்கையாளர்கள் நிதி நிறுவன அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை காந்திபுரம் பகுதியிலுள்ள 6-வது வீதியில் கோகுலகண்ணன் சிட்பண்ட்ஸ் என்ற பெயரில் கடந்த சில வருடங்களாக நிதி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தை சக்திவேல், சுதா ஆகிய தம்பதியினர் நடத்தி வருகின்றனர்.
இந்த நிதி நிறுவனத்தினர் சீட்டு நடத்தி பொதுமக்களிடம் வசூல் செய்த பணத்தை திருப்பித் தராமல் காலம் தாழ்த்தி வருகின்றனர். இதனால், பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கும், நிதி நிறுவனத்துக்கும் கடந்த சில வருடங்களாகவே முரண் நிலவி வருகிறது. அதேபோல, பாதிக்கப்பட்டவர்கள் இந்த நிதி நிறுவனத்தின் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளனர்.
இதில், அதிக வட்டி தருவதாகக் கூறி தினவசூல் அடிப்படையில் 100-க்கும் மேற்பட்டோரிடம், இந்நிறுவனம் தலா ரூ. 2 லட்சம் முதல் ரூ. 20 லட்சம் வரை என சுமார் ரூ. 5 கோடிக்கு அதிகமாக பணம் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், பணம் கட்டியவர்கள் திரும்பக் கேட்டால் அடியாட்களைக் கொண்டும், காவல்துறை உதவியோடும் மிரட்டியதாக, தொடர்ந்து புகார்கள் கொடுத்த வண்ணம் உள்ளனர்.

இந்த நிலையில், நிதி நிறுவனத்தினர் இன்று பாதிக்கப்பட்டவர்களிடம் பணத்தைத் திருப்பித் தருவதாக அழைத்து இருந்தனர். ஆனால், பணத்தை திடீரென தர மறுத்துவிட்டனர். இதனால், பாதிக்கப்பட்டவர்கள் நிதி நிறுவனத்தை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர், சம்பவம் அறிந்து வந்த போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்திக் கூட்டத்தை கலைத்தனர்.