கோவை : தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி கோவையில் அடுத்த மாதம் 10-ம் தேதி நடைபெற உள்ள நிலையில், அதற்கான கால்கோல் நடும் விழா செட்டிபாளையம் திடலில் இன்று நடைபெற்றது.
கோவை : தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி கோவையில் அடுத்த மாதம் 10-ம் தேதி நடைபெற உள்ள நிலையில், அதற்கான கால்கோல் நடும் விழா செட்டிபாளையம் திடலில் இன்று நடைபெற்றது.

கோவை மாவட்ட நிர்வாகம் மற்றும் கோவை ஜல்லிக்கட்டு சங்கம் சார்பாக பிப்ரவரி 10-ம் தேதி, கோவையில் ஜல்லிக்கட்டு விளையாட்டு போட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான கால்கோல் மற்றும் தொடக்க பூஜை ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறவிருக்கும், எல்&டி பைபாஸ் சாலையில் உள்ள செட்டிப்பாளையம் திடலில், நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில், அ.தி.மு.க., எம்.எல்.ஏ.க்கள் பி.ஆர்.ஜி. அருண்குமார், அம்மன் அர்ச்சுனன், கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன், மாநகராட்சி ஆணையர் க. விஜயகார்த்திகேயன், மாநகராட்சி துணை ஆணையர் காந்திமதி, கோவை மாநகர காவல் ஆணையர் சுமித் சரண், கோவை மாநகர போக்குவரத்து காவல்துறை துணை ஆணையர் சுஜித் குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஜல்லிக்கட்டு போட்டிக்கான ஏற்பாடுகள் குறித்து கோவை ஜல்லிக்கட்டு சங்கத்தின் செயலாளர் கூறியதாவது :- நீதிமன்றத்தின் உத்தரவுப்படி, கோவையைச் சேர்ந்த பல்வேறு ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் ஒன்றிணைந்து உருவாக்கப்பட்டுள்ள 'கோவை ஜல்லிக்கட்டு சங்கம்', கோவை மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டியை நடத்துகிறது. சென்ற வருடத்தைப் போலவே, இந்த ஆண்டும் கோவை மக்கள் ஜல்லிக்கட்டை நேரில் பார்க்க ஆர்வத்துடன் உள்ளனர். இதுவரை 700 ஜல்லிக்கட்டு காளைகளும், 400-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்களும் பதிவு செய்துள்ளனர்.
கடந்த ஆண்டு பார்வையாளர்களின் எண்ணிக்கை மிக அதிகமாக இருந்தது. அதனைக் கருத்தில் கொண்டு இந்த முறை அனைவரும் ஜல்லிக்கட்டு போட்டியை பார்க்கும் வகையில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்படவுள்ளன, என்றனர்.