கோவை : தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு மாணவ, மாணவிகள் பங்கேற்கும் விழிப்புணர்வு பேரணியை கோவை மாவட்ட ஆட்சியர் த.ந. ஹரிஹரன் தொடங்கி வைத்தார்.
கோவை : தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு மாணவ, மாணவிகள் பங்கேற்கும் விழிப்புணர்வு பேரணியை கோவை மாவட்ட ஆட்சியர் த.ந. ஹரிஹரன் தொடங்கி வைத்தார்.

நிர்மலா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் தொடங்கிய இந்தப் பேரணியில், கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். மாணவர்கள் வாக்களிப்பதன் முக்கியத்துவத்தினை வலியுறுத்தும் வகையில் விழிப்புணர்வு வாசகங்களை முழங்கிச் சென்றனர். இந்த விழிப்புணர்வு பேரணியானது, நிர்மலா மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தொடங்கி பந்தய சாலை வரை சென்றது.

நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் த.ந.ஹரிஹரன் பேசுகையில், "வாக்களிப்பதை மக்கள் தங்கள் கடமையாகக் கருத வேண்டும் என்ற விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்துவதே இந்த நாளின் நோக்கம்," என்றார்

இதனிடையே, கோவை மாநகராட்சி பிரதான அலுவலகம் விக்டோரியா ஹால் வளாகத்தில், வாக்காளர் உறுதி மொழியினை மாநகராட்சி ஆணையர் க.விஜயகார்த்திகேயன் தலைமையில் அனைத்து அலுவலர்கள், பணியாளர்களும் ஏற்றுக் கொண்டனர்.
இதேபோல, நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் தேசிய வாக்காளர் தின விழாவை மாவட்ட தேர்தல் அதிகாரியும், மாவட்ட ஆட்சியருமான இன்னசென்ட் திவ்யா தொடங்கி வைத்தார்.

அப்போது, அவர் பேசியதாவது :- தற்போதுள்ள இளைஞர்கள் தேர்தலில் வாக்களிக்க முன் வர வேண்டும். கடந்த முறை நடைபெற்ற தேர்தலில் நீலகிரி மாவட்டத்தில் 73 சதவீதம் மட்டுமே வாக்குகள் பதிவாகியுள்ளது. மீதமுள்ள 27 சதவீதம் பேர் வாக்களிக்கவில்லை. மேலும், 18 வயது நிரம்பியவர்கள் வாக்களிக்க வேண்டும், என கேட்டுக் கொண்டார்.

தேசிய வாக்காளர் தின விழாவை முன்னிட்டு மாவட்டத்தில் உள்ள பள்ளி மாணவர்களிடையே நடைபெற்ற பேச்சு போட்டி, கட்டுரைப் போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்குக் கேடயம் மற்றும் சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.