கோவை : தடாகம் பகுதியில் விவசாய நிலங்களை சேதப்படுத்தி வந்த மற்றொரு காட்டு யானையான சின்னத்தம்பிக்கு மயக்க ஊசி செலுத்தப்பட்ட நிலையில், அதனை லாரியில் ஏற்றும் முயற்சி நடைபெற்று வருகிறது.
கோவை : தடாகம் பகுதியில் விவசாய நிலங்களை சேதப்படுத்தி வந்த மற்றொரு காட்டு யானையான சின்னத்தம்பிக்கு மயக்க ஊசி செலுத்தப்பட்ட நிலையில், அதனை லாரியில் ஏற்றும் முயற்சி நடைபெற்று வருகிறது.

தடாகம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள மக்களுக்கு சின்னதம்பி, விநாயகன் ஆகிய இரண்டு காட்டு யானைகள் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வந்ததாக புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து, பொதுமக்களின் கோரிக்கைக்குப் பின்னர், கடந்த டிசம்பர் மாதம் பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு விநாயகன் யானை, கும்கி யானைகளான விஜய், சேரன், ஜான் மற்றும் பொம்மன் ஆகியவற்றின் உதவியதால் பிடிக்கப்பட்டது. பின்னர், வனத்துறைக்குச் சொந்தமான லாரியில் ஏற்றி, முதுமலை வனப்பகுதியில் கொண்டு சென்று விடப்பட்டது.
இந்த நிலையில், மற்றொரு காட்டு யானையான சின்னதம்பியை பிடிப்பதற்கான முயற்சியில் வனத்துறையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். குட்டி உள்பட 2 யானைகளுடன் சுற்றித் திரியும் சின்னத்தம்பியை, வனத்துறையினரின் மூன்று மணி நேரப் போராட்டத்திற்கு பிறகு, தனியாகப் பிரிக்கப்பட்டது. இருப்பினும், பிற யானைகள் உடன் இருப்பதால், சின்னத்தம்பியை லாரியில் ஏற்றுவது அரிதான காரியம் என்பதை வனத்துறையினர் உணர்ந்தனர்.
இதைத் தொடர்ந்து, மூன்று முறை மயக்க ஊசியில் மருந்து செலுத்தப்பட்ட சின்னத்தம்பி, ஓரிடத்தில் நிற்க முடியாமல் நடந்து கொண்டே இருக்கிறது. விநாயகன் யானையை லாரியில் ஏற்றியதைப் போன்றே, தற்போது சின்னத்தம்பியின் கால்களிலும் கயிறு கட்டி மரத்தில் கட்டப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, கலீம், விஜய் ஆகிய கும்கி யானைகளின் உதவியால் அடுத்தகட்டமாக, லாரியில் ஏற்றப்படும். இதனிடையே, சின்னத்தம்பியின் மீது வனத்துறை ஊழியர் ஒருவர் ஏறி, ரேடியோ காலரைப் பொருத்தியுள்ளார்.

தற்போது, மயக்க ஊசி செலுத்திப் பிடிக்கப்பட்டுள்ள சின்னத்தம்பி, இன்னும் சில மணி நேரங்களுக்குள் லாரியில் ஏற்றப்பட்டு, இன்று மாலைக்குள் வேறு வனப்பகுதியில் கொண்டு சென்று விடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் இது தொடர்பான செய்திகளை படிக்க:
விரைவில் தடாகம் பகுதியில் இருந்து வெளியேற்றப்படுகிறது சின்னத்தம்பி : மயக்க ஊசி செலுத்தி பிடிக்க நடவடிக்கை