கோவை : கோவை மாவட்டத்திலுள்ள வால்பாறை பகுதியில் ஆசிரியர்கள் போராட்டத்தைக் கண்டித்து மஸ்தான் என்ற சமூக ஆர்வலர், தனது குழந்தைகளுடன் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கோவை : கோவை மாவட்டத்திலுள்ள வால்பாறை பகுதியில் ஆசிரியர்கள் போராட்டத்தைக் கண்டித்து மஸ்தான் என்ற சமூக ஆர்வலர், தனது குழந்தைகளுடன் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

வால்பாறை கக்கன் காலனியைச் சேர்ந்தவர் அஜீஸ் என்கிற மஸ்தான் (37). இவர், இந்தப் பகுதியில் சமூக ஆர்வலராக செயல்பட்டு வருகிறார். இவரது குழந்தைகள் வால்பாறையில் உள்ள அரசு பள்ளியில் படித்து வருகின்றனர்.
இந்த நிலையில், ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பு சார்பாக ஆசிரியர்கள் பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்துவது உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 3 நாட்களாகப் பணிகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், பெரும்பாலான பள்ளிகள் மூடப்பட்டு, மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளதாக பெற்றோர்கள் வேதனை தெரிவித்து வந்தனர்.
இந்த நிலையில், ஆசிரியர்களின் போராட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மஸ்தான் தனது மகள் அஜ்மிக்கா (10) மற்றும் அஜ்மல் (6) ஆகியோருடன் வால்பாறை காந்தி சிலை முன்பு இன்று திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டார். பின்னர், தகவலறிந்து வந்த போலீசார் போராட்டத்தை முடித்துக் கொள்ளும்படி கேட்டுக் கொண்ட பின்னரும், மஸ்தான் போராட்டத்தை தொடர்ந்தார். இதையடுத்து, காவல்துறையினர் குழந்தைகளுடன் போராடி வந்த மஸ்தானை, வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
இது குறித்து சமூக ஆர்வலரும், குழந்தைகளின் தந்தையுமான மஸ்தான் கூறியதாவது :- இப்படி ஆசிரியர்கள் பள்ளிக்கு வராததால் குழந்தைகள் தேர்வு நேரத்தில் சிரமப்படுவார்கள். 10, 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் பள்ளி செல்வதாகக் கூறிவிட்டு, வால்பாறை பகுதிகளில் சுற்றுவதால், விபத்துக்கள் ஏற்படும் சூழல் உள்ளது.

ஆசிரியர்கள் பள்ளிக்கு வராமல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால், மாணவர்கள் முழு ஆண்டு தேர்வு வருகின்ற நேரத்தில் பாதிக்கப்படுவார்கள் என்பதை உணர்த்தவே, தனது குழந்தைகளுடன் காந்திசிலை அருகே சாலை மறியலில் ஈடுபட்டேன், என தெரிவித்தார்.