கோவை : ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேர் விடுதலைக்காக,' #28Years Enough Governor Movement' என்ற பேரறிவாளன் தாயாரின் சுற்றுப்பயணம் கோவையில் இன்று தொடங்கியது.
கோவை : ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேர் விடுதலைக்காக,' #28Years Enough Governor Movement' என்ற பேரறிவாளன் தாயாரின் சுற்றுப்பயணம் கோவையில் இன்று தொடங்கியது.
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலைக்காக, பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் மக்களை சந்திக்க உள்ளார். இதற்காக, '#28Years Enough Governor Movement' என்ற பெயரில் கோவையில் இன்று தொடங்கிய இந்த சுற்றுப்பயணம் மூலமாக, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு செல்ல திட்டமிட்டுள்ளார். அரசியல் இயக்கங்கள், மக்கள், மாணவர்கள் என பல தரப்பினரையும் சந்தித்து 7 பேர் விடுதலைக்காக கலந்துரையாடல் நடத்த உள்ளார்.
முதற்கட்டமாக, கோவை ரயில் நிலையம் அருகே நடந்த தொடக்க நிகழ்ச்சியில், தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கு.ராமகிருட்டிணன், வழக்கறிஞர் சிவக்குமார், எழுத்தாளர் பாமரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பின்னர், செய்தியாளர்களிடம் பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் கூறியதாவது :- 28 ஆண்டு காலமாக பேரறிவாளன் விடுதலைக்காகப் போராடி வருகிறேன். உச்சநீதிமன்ற தீர்ப்புப்படி, தமிழக அரசு முறையாக அமைச்சரவையைக் கூட்டி, அவர்களின் விடுதலை தொடர்பான ஆவணங்களை ஆளுநர் ஒப்புதலுக்கு முறையாக அனுப்பியது.
அதில், ஆளுநர் உடனடியாக கையெழுத்திடுவதே முறை என்றாலும், ஆளுநர் நான்கரை மாதங்களாக காலதாமதம் செய்து வருகிறார். ஆளுநரின் நடவடிக்கை தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தியுள்ளது.
மக்களிடம் எங்களது தரப்பு நியாயத்தைக் கொண்டு சேர்க்கும் வகையில், சுற்றுப்பயணம் செய்து மக்களை சந்திக்க உள்ளேன். மக்களின் கருத்துக்களை கேட்டு இறுதிப் போராட்டம் பற்றி முடிவெடுப்பேன். தண்டனை அனுபவித்த பிறகும், சிறையில் இருப்பது நியாயம் அல்ல. ஆளுநரின் செயல்பாடு நீதியைப் படுகொலை செய்துள்ளது.
உச்சநீதிமன்ற தீர்ப்பை ஆளுநர் மதிக்க வேண்டும். இந்தப் பயணம் ஏழுபேரின் விடுதலைக்கானது. விடுதலை கிடைக்கும் வரை எனது பயணம் தொடரும். தேர்தல் ஓட்டு அரசியல்தான் எங்கள் வாழ்க்கையைப் புரட்டி போட்டது. இது கேவலமான அரசியல். ஓட்டு அரசியல் இலாபத்திற்காக, தனது மகனைப் பயன்படுத்துவது நாகரீகமற்றது, இவ்வாறு அவர் வேதனை தெரிவித்தார்.