கோவை : தடாகம் குடியிருப்புப் பகுதியில் இருந்து விநாயகன் காட்டு யானை பிடித்து செல்லப்பட்டு ஒரு மாதம் ஆன நிலையில், மற்றொரு யானையான சின்னதம்பியை பிடிக்கும் முயற்சியை வனத்துறையினர் தீவிரப்படுத்தியுள்ளனர்.
கோவை : தடாகம் குடியிருப்புப் பகுதியில் இருந்து விநாயகன் காட்டு யானை பிடித்து செல்லப்பட்டு ஒரு மாதம் ஆன நிலையில், மற்றொரு யானையான சின்னதம்பியை பிடிக்கும் முயற்சியை வனத்துறையினர் தீவிரப்படுத்தியுள்ளனர்.

தடாகம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள மக்களுக்கு காட்டு யானைகள் பெரிதும் அச்சுறுத்தலாக இருந்து வருகின்றன. இதனால், ஏற்படும் மனித-விலங்கு மோதல்களால், உயிர் பலியும் ஏற்படுகிறது. குறிப்பாக, சின்னதம்பி, விநாயகன் ஆகிய இரண்டு யானைகள்தான் அடிக்கடி குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைந்து பாதிப்பை ஏற்படுத்துவதாகவும் கூறப்பட்டு வந்தது.
இதையடுத்து, பொதுமக்களின் கோரிக்கைக்குப் பின்னர், கடந்த டிசம்பர் மாதம் பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு விநாயகன் யானை, கும்கி யானைகளான விஜய், சேரன், ஜான் மற்றும் பொம்மன் ஆகியவற்றின் உதவியதால் பிடிக்கப்பட்டது. பின்னர், வனத்துறைக்குச் சொந்தமான லாரியில் ஏற்றி, முதுமலை வனப்பகுதியில் கொண்டு சென்று விடப்பட்டது.

இந்த நிலையில், மற்றொரு காட்டு யானையான சின்னதம்பியை பிடிப்பதற்கான முயற்சியில் வனத்துறையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக, விநாயகனை பிடிப்பதற்காகப் பயன்படுத்தப்பட்ட கும்கி யானைகள் கோவையிலேயே முகாமிட்டுள்ளன. சாடிவயல் முகாமில் பொம்மன், ஜான் ஆகிய கும்கிகளும், தடாகம் பகுதியில் உள்ள முகாமில் விஜய், சேரன் ஆகிய கும்கிகளும் தங்க வைக்கப்பட்டுள்ளன. இதனிடையே, சின்னத்தம்பி யானையை பிடிப்பதற்காக, முதுமலையில் இருந்து மேலும் ஒரு கும்கி யானை இன்று மாலைக்குள் அழைத்து வரப்படுகிறது. இந்த கும்கி யானை முகாமிற்கு வந்த ஒரு தினத்திற்கு பிறகு, சின்னத்தம்பியை பிடிக்கும் ஆபரேசனில் ஈடுபடுத்தப்பட இருக்கிறது.
தற்போது, கோவை மற்றும் பெரியநாயக்கன் பாளையம் வனப்பகுதிகளில் ரோந்து வரும் சின்னத்தம்பி யானையை வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். சின்னத்தம்பியை பிடிப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் முறையாக மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அதேவேளையில், விரைவில் சின்னத்தம்பி யானையை பிடித்து விடுவதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.