கோவை : கோவை ரயில்நிலையத்தில் அமைக்கப்பட்டு வந்த 100 அடி உயர பிரம்மாண்ட கொடிக்கம்பத்தில், 9.5 கிலோ எடை கொண்ட தேசியக்கொடியை சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் சுப்பாராவ் இன்று ஏற்றி வைத்தார்.
கோவை : கோவை ரயில்நிலையத்தில் அமைக்கப்பட்டு வந்த 100 அடி உயர பிரம்மாண்ட கொடிக்கம்பத்தில், 9.5 கிலோ எடை கொண்ட தேசியக்கொடியை சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் சுப்பாராவ் இன்று ஏற்றி வைத்தார்.

குடியரசு தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட 100 ரயில் நிலையங்களில், 100 அடி உயர தேசியக்கொடி கம்பங்கள் நிறுவப்பட்டு வருகிறது. இதற்கான கட்டுமானப் பணிகள் அனைத்தையும் குடியரசு தினத்திற்கு முன் முடிக்க ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. 100 அடி உயர கொடிக்கம்பங்கள் அமைக்க தென்னக ரயில்வேயில் 8 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

இதில் சேலம் ரயில்வே கோட்டத்தில் உள்ள கோவை ரயில் நிலையத்தில் ரூ. 13 லட்சம் மதிப்பீட்டில் கொடிக் கம்பம் அமைக்கப்பட்டுள்ளது. 30 அடி நீளமும், 20 அடி அகலமும் கொண்ட இந்த தேசியக்கொடியை சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் சுப்பாராவ் இன்று ஏற்றி வைத்தார்.

இதுகுறித்து சுப்பாராவ் செய்தியாளர்களிடம் கூறியதாவது :- கோவை ரயில்நிலையத்தில் பல்வேறு வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பிளாட்பார்ம் 1 மற்றும் 2-க்கும் செல்ல நகரும் படிக்கட்டுகள் (escalator) அமைக்கும் பணிகள் ரூ. 70 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வருகிறது. அடுத்த மாதம் மல்டிலெவல் இருசக்கர வாகன நிறுத்தம் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்து, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வரும். கோவை - பொள்ளாச்சி பயணிகள் ரயில் பயணிகளின் வரவேற்பைப் பொறுத்து ,கூடுதல் நேரங்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.