கோவை : கிராமசபை கூட்டம் நடத்தியது தொடர்பாக தி.மு.க., நிர்வாகிகள் மீது ஆலாந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை : கிராமசபை கூட்டம் நடத்தியது தொடர்பாக தி.மு.க., நிர்வாகிகள் மீது ஆலாந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆலாந்துறை அருகே உள்ள ஜாகிர் நாயக்கன்பாளையம் பத்திரகாளியம்மன் கோவில் மைதானத்தில் கடந்த18-ம் தேதி தி.மு.க., சார்பில் கிராமசபைக் கூட்டம் நடத்தப்பட்டது. இதில், கோவை வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சி.ஆர்.ராமச்சந்திரன், தொண்டாமுத்தூர் ஒன்றிய செயலாளர் சேனாதிபதி ஆகியோர் கலந்து கொண்டு, அ.தி.மு.க. ஆட்சி குறித்து பேசினர்.
இதுதொடர்பாக, அப்பகுதி அ.தி.மு.க. கிளை செயலாளர் நாகராஜ் (55), ஆலாந்துறை காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதில், அ.தி.மு.க. ஆட்சி குறித்து பேசியதாகவும், அதேபோல, பொதுமக்களின் ஒற்றுமையைக் கெடுக்கும் வகையில் பேசியதாகவும் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து, இந்தப் புகாரின் பேரில் போலீசார் சி.ஆர்.ராமச்சந்திரன், சேனாதிபதி ஆகியோர் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
அதேபோல, அனுமதியில்லாமல் கிராமசபைக் கூட்டம் நடத்திய தி.மு.க. மாவட்ட செயலாளர் சி.ஆர்.ராமச்சந்திரன், ஒன்றிய செயலாளர் சேனாதிபதி ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜாகிர்நாயக்கன்பாளையம் வி.ஏ.ஓ ஜெகதீஷ், ஆலாந்துறை காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இந்தப் புகாரின் பேரில் இரண்டு பேரின் மீது இரு பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.