கோவை : கருமத்தம்பட்டி அருகே ஆசிரியர் ஒருவர் மனைவி, 2 குழந்தைகள் மற்றும் தனது தாய் உட்பட 4 பேரை கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை : கருமத்தம்பட்டி அருகே ஆசிரியர் ஒருவர் மனைவி, 2 குழந்தைகள் மற்றும் தனது தாய் உட்பட 4 பேரை கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம், கருமத்தம்பட்டி அமலி நகரைச் சேர்ந்தவர் அந்தோணி ஆரோக்கியதாஸ் (38). இவர் தனது குடும்பத்துடன் இப்பகுதியில் வசித்து வருகிறார். திருப்பூர் கூலிபாளையம் பகுதியில் உள்ள நடுநிலைப் பள்ளி ஒன்றில் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். இவருக்கு ஷோபனா (30), என்ற மனைவியும், ரித்திக் மைக்கேல் (7), மற்றும் ரியா ஏஞ்சலின் (2), என்ற குழந்தைகள் உள்ளனர். மேலும், இவருடன் இவரது தாயார் புவனேஸ்வரியும் (65), வசித்து வருகிறார் .
இந்நிலையில், அந்தோணி ஆரோக்கிய தாஸ் வீடு இன்று காலை முதல் திறக்காததால் அவரது உறவினர்கள் சந்தேகம் அடைந்தனர். எனவே, மாலை 6 மணி அளவில் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளனர். அப்போது, படுக்கை அறையில் அந்தோணி ஆரோக்கியதாஸ் தூக்கிட்ட நிலையிலும், அவரது மனைவி ஷோபனா மற்றும் குழந்தைகள் ரித்திக் மைக்கேல், ரியா, தாயார் புவனேஸ்வரி ஆகியோர் படுக்கையில் இறந்த நிலையில் கிடந்துள்ளனர்.
இதனையடுத்து, கருமத்தம்பட்டி காவல்துறையினருக்கு தகவல் அளித்ததைத் தொடர்ந்து ஆய்வாளர் சண்முகம் தலைமையில் போலீசார் அங்கு விரைந்தனர். அதையடுத்து, 5 பேரின் உடல்களைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில், ஆரோக்கிய தாஸ் அவரது தாயார், மனைவி மற்றும் குழந்தைகளை கொலை செய்துவிட்டு, அவரும் தற்கொலை செய்து கொண்டது, அவருடைய வீட்டில் எழுதி வைத்த கடிதத்தில் மூலம் போலீசாருக்கு தெரியவந்தது.
மேலும், அந்த கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது:- நான் நீண்ட வருடங்களாக முதுகு வலியால் அவதிப்பட்டு வருகிறேன். அதனால் தற்கொலை செய்து கொண்டேன். அதற்கு முன்னர் எனது குடும்ப உறுப்பினர்களுக்கு விஷம் கொடுத்து விட்டேன், என்பதாக எழுதி வைத்திருந்தார்.
இதனையடுத்து, 5 பேரின் உடல்களை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காகக் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், சம்பவ இடத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாண்டியராஜன், கருமத்தம்பட்டி காவல்துறை துணை கண்காணிப்பாளர் பாஸ்கரன் இணைந்து விசாரணை மேற்கொண்டனர்.