கோவை : தைப்பூசத்தையொட்டி மருதமலையில் வாகனங்கள் ஏறத் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், கோவிலைச் சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
கோவை : தைப்பூசத்தையொட்டி மருதமலையில் வாகனங்கள் ஏறத் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், கோவிலைச் சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
ஆண்டுதோறும் கோவை மருதமலை சுப்பிரமணிய சாமி கோவிலில் தைப்பூச தேரோட்ட திருவிழாவானது சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதேபோல, இந்தாண்டு வரும் 21 ம் தேதி (நாளை மறுநாள்) தேரோட்டத்துடன் தைப்பூசத் திருவிழா தொடங்க உள்ளது. இந்த தைப்பூச தேரோட்ட விழாவிற்கு லட்சக்கணக்கான பக்தர்கள் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் இருந்தும் வந்து இறைவனை தரிசனம் செய்து செல்வர். அதேபோல, பக்தர்கள் காவடி, பால்குடம் எடுத்து வந்தும், அலகு குத்தியும் தைப்பூச திருவிழாவை கொண்டாடுவது வழக்கம்.
இப்படி லட்சக்கணக்கான மக்கள் வரும் மருதமலைப் பகுதியில் ஏற்படும் கூட்ட நெரிசலை சரிசெய்ய கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் உத்தரவின் பேரில், துணை காவல் கண்காணிப்பாளர் மேற்பார்வையில் 4 ஆய்வாளர்கள் தலைமையில் சுமார் 300-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
அதேபோல, போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருக்க மலை மீது இருசக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் என எந்த வாகனத்திற்கும் அனுமதி இல்லை. பக்தர்கள் தாங்கள் ஓட்டி வரும் வாகனங்களை மலையடிவாரத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வாகன நிறுத்தத்தில் நிறுத்தி கொண்டு மருதமலை தேவஸ்தான பேருந்துகளில் கோவிலுக்குள் செல்லலாம்.
இது தொடர்பாக இந்து அறநிலைத்துறை அதிகாரிகள் கூறுகையில்,” கடந்த ஆண்டு தைப்பூசத்தின் போது, சுமார் 2 லட்சம் பக்தர்கள் இந்தக் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தனர். இந்த ஆண்டு கூடுதல் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், கூட்டத்தை சமாளிப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும், டி.என்.எஸ்.டி.சி. சார்பில் விடப்பட்டுள்ள கூடுதல் பேருந்துகளின் மூலம், மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளில் இருந்து வரும் பக்தர்கள் கோவிலுக்கு எளிதில் வந்தடைய முடியும்,” என்றனர்.