கோவை : பொங்கல் பண்டிகைக்காக வெளியான பேட்ட, விஸ்வாசம் படத்தின் வசூல் வெற்றியை இரு பெரிய நடிகர்களின் ரசிகர்களும் சமூக வலைதளங்களில் விவாதத்தில் ஈடுபட்டு வந்த நிலையில், டாஸ்மாக் கடையின் வசூல் அனைவரின் வாயையும் அடைத்துள்ளது.
கோவை : பொங்கல் பண்டிகைக்காக வெளியான பேட்ட, விஸ்வாசம் படத்தின் வசூல் வெற்றியை இரு பெரிய நடிகர்களின் ரசிகர்களும் சமூக வலைதளங்களில் விவாதத்தில் ஈடுபட்டு வந்த நிலையில், டாஸ்மாக் கடையின் வசூல் அனைவரின் வாயையும் அடைத்துள்ளது.
பொங்கல் பண்டிகையை சிறப்பாகக் கொண்டாடும் வகையில், தமிழக அரசு 14-ம் தேதி அரசு விடுமுறையை அறிவித்து, 6 நாட்கள் தொடர் விடுமுறையை வழங்கியது. மேலும், ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கும் தலா ரூ. 1,000 பொங்கல் பரிசாகவும் வழங்கப்பட்டது.
இதனால், அனைவரும் தங்களது சொந்த ஊருக்குச் சென்று பொங்கலை சவுகரியமாகக் கொண்டாடினர். மேலும், சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த்தின் பேட்ட மற்றும் தல அஜித்தின் விஸ்வாசம் திரைப்படம் வெளியாகியது. இந்தப் படங்களை அனைவரும் குடும்பத்துடன் சென்று மகிழ்ச்சியுடன் கண்டுகளித்தனர். இதன் காரணமாக வசூலில் இரண்டு படங்களும் பாக்ஸ் ஆபிஸை எட்டியது. இதனால், இரு பெரிய நடிகர்களின் ரசிகர்களும் உற்சாகமடைந்துள்ளனர்.
மேலும், சமூகவலைதளங்களில் ரஜினி மற்றும் அஜித் ரசிகர்கள் வசூல் சாதனை குறித்து விவாதம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், வசூலில் சாதனை படைத்தது நாங்கள்தான் என மதுபிரியர்கள் எனக் கூறுவதைப் போல, மதுபானக் கடைகளின் வசூல் திகைக்க வைத்துள்ளது.
பொங்கல் விழாவையொட்டி தமிழகத்தில் உள்ள 5,140 மதுபான கடைகள் மூலம் போகி, பொங்கல் பண்டிகை, காணும் பொங்கல் ஆகிய 3 நாட்களில் மட்டும் மதுபான விற்பனை ரூ. 500 கோடியை தாண்டி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து டாஸ்மாக் நிர்வாக அதிகாரி ஒருவர் நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், "இந்த ஆண்டு போகி பண்டிகை அன்று ரூ. 143 கோடிக்கு மதுபான விற்பனை நடந்தது. கடந்த ஆண்டு இந்த விற்பனை ரூ.133 கோடியாக இருந்தது.
அதேபோன்று பொங்கல் தினத்தன்று ரூ. 209 கோடிக்கு விற்பனை நடந்துள்ளது. கடந்த ஆண்டு இந்த விற்பனை ரூ. 204 கோடியாக இருந்தது. திருவள்ளுவர் தினமான 16-ம் தேதி மதுபானக்கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.
காணும் பொங்கல் தினமான 17-ம் தேதி மதுபான விற்பனை அமோகமாக இருந்தது. இதனால், இந்த ஆண்டு மதுபான விற்பனை ரூ. 500 கோடியை தாண்டும். இது, கடந்த ஆண்டு விற்பனையை விட 10 சதவீத உயர்வு ஆகும்,” இவ்வாறு தெரிவித்துள்ளார்.