கோவை : போத்தனூர் அருகே உள்ள பிளாஸ்டிக் குடோனில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில், உள்ளே ஏராளமான பிளாஸ்டிக் பொருட்கள் எரிந்து நாசமாகின.
கோவை : போத்தனூர் அருகே உள்ள பிளாஸ்டிக் குடோனில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில், உள்ளே ஏராளமான பிளாஸ்டிக் பொருட்கள் எரிந்து நாசமாகின.
கோவை மாவட்டம் போத்தனூர் அருகே குருசாமி பிள்ளை வீதியில் உள்ள குமரன் நகரில் ராஜேந்திரன் என்பவருக்கு சொந்தமான இடம் உள்ளது. இந்த இடத்தை சின்னதுரை என்பவர் வாடகைக்கு எடுத்து, பிளாஸ்டிக் மற்றும் அலுமனிய பொருட்கள் விற்பனை செய்யும் குடோனை அமைத்து நடத்தி வருகிறார். இந்த நிலையில், இன்று காலை சுமார் 7 மணியளவில் குடோன் திடீரென தீப்பற்றி எரிந்தது. குடோனில் இருந்த கரும்புகை வெளியேறியதைக் கண்ட அக்கம்பக்கத்தினர், தீயை அணைக்க முற்பட்டனர். இருப்பினும், முயற்சி பலனளிக்காததால், தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர்.
இதனைத் தொடர்ந்து, அங்கு விரைந்த வந்த தெற்கு தீயணைப்பு துறையினர், சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேல் போராடி தீயை அணைத்தனர். மேலும், குடோனுக்கு அருகே அமைந்திருந்த வீட்டிலும் தீ பரவியது. இதனால், வீட்டில் இருந்த பொருட்கள் எரிந்து சேதம் அடைந்தன. இது குறித்த தகவல் அறிந்த போத்தனூர் காவல்துறையினர், தீ விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா..? அல்லது வேறு ஏதாவது காரணமா..? என்ற கோணத்திலும் விசாரணை செய்து வருகின்றனர். குடியிருப்புகள் உள்ள பகுதியில் திடீரென ஏற்பட்ட இந்த தீ விபத்து காரணமாக, அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.