கோவை : கோவை மாவட்டத்தின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையைப் பாதுகாக்க, சேஞ்ச்.ஆர்க் என்ற இணையப் பக்கம் கையெழுத்து மனு வழியாக மக்களுக்கு அழைப்பு விடுக்கிறது.
கோவை : கோவை மாவட்டத்தின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையைப் பாதுகாக்க, சேஞ்ச்.ஆர்க் என்ற இணையப் பக்கம் கையெழுத்து மனு வழியாக மக்களுக்கு அழைப்பு விடுக்கிறது.
அந்த பக்கத்தில் கூறியிருப்பதாவது ;- கோவை மாநகராட்சி, பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த சூயஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் ஏற்படுத்தியுள்ளது. 24 மணி நேரமும் குடிநீர் விநியோகத்துக்காக, தண்ணீரைத் தனியாருக்குத் தாரைவார்க்கிறது.
இதனால், தற்போதிருக்கும் தண்ணீர் குழாய் அமைப்புகள் இல்லாமல் போய் விடும் சூழல் ஏற்படும். இதனால், ஏழ்மையான குடும்பங்கள் தண்ணீரை விலை கொடுத்து வாங்கிக் கொள்ள முடியாத சூழல் உருவாகும்.
24 மணி நேரமும் மக்களுக்கு குடிநீர் கிடைக்கும் என்பது கவர்ச்சிகரமாக இருந்தாலும் பணம் இருப்பவர்களுக்கே தண்ணீர் கிடைக்கும் என்ற நிலை உருவாகும் என பொது மக்களிடையே அச்சம் எழுந்துள்ளது. குறிப்பாக இனி குடிநீர் கட்டணத்தை மாநகராட்சி நிர்ணயிக்க முடியாது. திட்டத்தைச் செயல்படுத்தும் சூயஸ் நிறுவனம் நிர்ணயிக்கும் அளவுக்கு பணத்தை செலுத்த முடியாதவர்களுக்கு குடிநீர் வினியோகம் நிறுத்தப்படும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது.
சூயஸ் அடுத்த 26 ஆண்டுகள் இந்த திட்டத்தை செயல்படுத்தும் வாய்ப்புள்ளது. இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாடுகளில் பல தொழில்நுட்பங்கள் வளர்ந்து கொண்டிருக்க இந்த திட்டத்தையும் நம் நாட்டிலே மேற்கொள்ள முயற்சி எடுக்கலாம். இந்த பெரிய திட்டத்தை அரசே செயல்படுத்தாமல் இன்னொரு பிரெஞ்சு கார்பரேட் கம்பேனிக்கு கொடுப்பதால் குடிநீரில் பகல் கொள்ளை நடைபெறும் அவல நிலை உருவாகும்.
இதையடுத்து, குடிநீர் விநியோகம், தனியார் மயமாவது குறித்த மக்கள் கருத்து கேட்பு கூட்டம் எதுவுமே கோவையில் நடைபெறவில்லை. இன்றைய தேதியில் தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நடைபெறாத நிலையில் இந்த ஒப்பந்தம் எப்படி கையெழுத்தானது என்பதும் மர்மமாக உள்ளது.
தண்ணீர் என்பது விலைமதிப்பில்லாத வளம். சட்டென மாறும் வானிலைகளால், அது தற்சமயம் ஒவ்வொரு இடங்களுக்கும் மாறிக் கொண்டே இருக்கிறது. நல்ல பருவமழையின் போது சேமிக்கப்படும் நீரினை சேமித்து பயன்படுத்துவதே பற்றாக்குறையை ஏற்படுத்தி வரும் நிலையில், மக்கள் தொகைக்கு ஏற்றபடி குறிப்பிட்ட நேரம் மட்டுமே தண்ணீரை வழங்க முடியும்.
அடுத்து வரப்போகும் உலகப் போர் தண்ணீருக்கானது என்ற நிலையில், அயல்நாடு நிறுவனத்தை நம்பி இந்த ஒப்பந்தத்தைக் கொடுப்பது உகந்தல்ல. இதை இப்போதே நிறுத்தியாக வேண்டும். இல்லையெனில், இது ஒட்டுமொத்த நாட்டையே ஆபத்தில் சிக்க வைத்து விடும். எனவே, அதற்கு தக்க நடவடிக்கை எடுக்க, இந்த பக்கத்தில் தங்களது இணைய அஞ்சல் முகவரியைக் கொண்டு உள்நுழைந்து பின் ஆதரவை பதிவு செய்யுங்கள், இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.
இதுவரை, அந்த பக்கத்தில் இருக்கும் கருத்துக்கு ஆதரவு தெரிவித்து 72 பேர் தங்கள் கையெழுத்தைப் பதிந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த இணையப் பக்கத்தை பார்வையிட https://www.change.org/ இங்கே சொடுக்கவும்.