கோவை : கணுவாய் அருகே உள்ள தடுப்பணையில் சமூகவிரோதிகள் மது குடித்துவிட்டு, பாட்டில்களை உடைத்து நீர்நிலைப் பகுதியை கெடுத்து வருவதை தடுக்க வேண்டுமென காவல்துறையினருக்கு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
கோவை : கணுவாய் அருகே உள்ள தடுப்பணையில் சமூகவிரோதிகள் மது குடித்துவிட்டு, பாட்டில்களை உடைத்து நீர்நிலைப் பகுதியை கெடுத்து வருவதை தடுக்க வேண்டுமென காவல்துறையினருக்கு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
கணுவாய் அருகே உள்ள பன்னிமடை சாலையில் எம்.ஜி.ஆர் ஆட்சியின் போது, கட்டப்பட்ட தடுப்பணை உள்ளது. இந்த தடுப்பணை பகுதியில் ஆள் நடமாட்டம் அதிகமாக இல்லாததால், சட்டவிரோத செயல்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இரவு, பகல் என்று எந்த நேரமும் பார்க்காமல், இந்தத் தடுப்பணையை சமூகவிரோதிகள் மது குடிக்கவும், கஞ்சா குடிக்கவும் பயன்படுத்தி வருகின்றனர். இது தொடர்பாக இந்தப் பகுதியை சேர்ந்தவர்கள் புகார்கள் அளித்தும், சரியான நடவடிக்கைகள் இல்லை. இதனால், குற்றவாளிகளும் சமூகவிரோதிகளும் இந்தப் பகுதிகளில்,தொடர்ந்து சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தத் தடுப்பணை பகுதியில் பிராந்தி பாட்டில்களும், பீர் பாட்டில்களும் உடைந்த நிலையில், காணப்படுகிறது. இந்த செயல்பாடுகள் இயற்கைக்கு முரணானது. யானைகள் நடமாட்டம் அதிகமாக உள்ள பகுதியான இந்தத் தடுப்பணை பகுதியில் சமூக விரோதிகள் பாட்டில்களை உடைத்து போடுவது தண்டனைக்குரியது.
ஆகவே, நீர்நிலைப் பகுதியை கெடுத்து இயற்கைக்கு முரணாக செயல்பட்டு வரும் சமூக விரோதிகள் மீது காவல்துறையினர் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக செயற்பாட்டாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்

இது குறித்து சின்னவேடம்பட்டி ஏரி பாதுகாப்பு அமைப்பின் அமைப்பாளர் செல்வராஜ் கூறியதாவது :-
இந்த கணுவாய் பகுதியில் உள்ள தடுப்பணையானது சின்னவேடம்பட்டி ஏரிக்கு நீரை கொண்டு வரும் முக்கிய தடுப்பணையாக உள்ளது. அதேபோல, அனைத்து ஓடைகளின் ஆரம்பமாக உள்ளது.
ஆனால், இந்த தடுப்பணையில் சமூகவிரோதிகள் மண் அள்ளியும், கோழிக்கழிவுகளை கொட்டியும், மது பாட்டில்களை உடைத்து போட்டும் நீர்நிலை பகுதியை கெடுத்து வருகின்றனர். நாங்கள் சின்னவேடம்பட்டி பாதுகாப்பு அமைப்பு சார்பாக பன்னிமடை சாலையில் உள்ள தடுப்பணையை சுத்தம் செய்து உள்ளோம்.

ஆனால், மீண்டும் மீண்டும் சமூகவிரோதிகள் இந்த தடுப்பணையை தவறாக பயன்படுத்தி வருகின்றனர். நீர் வழிப்பாதையில் இப்படி மதுபாட்டில்களை உடைத்து போடுவது நல்லதல்ல. ஆகவே, காவல்துறையினர் இந்த பகுதிகளில் ரோந்து பணியை மேற்கொண்டு சட்டவிரோத நடவடிக்கைகளை தடுக்க வேண்டும், இவ்வாறு அவர் தெரிவித்தார்.