கோவை: தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்திற்கு அரசின் சார்பில் 555 புதிய பேருந்துகள் வழங்கப்பட்டுள்ளன.
கோவை: தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்திற்கு அரசின் சார்பில் 555 புதிய பேருந்துகள் வழங்கப்பட்டுள்ளன.
இந்த பேருந்துகளை சென்னையில் கடந்த 7-ம் தேதி நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். அதன்படி, இன்று கோவைக்கு வந்தடைந்த பேருந்துகளை சட்டப்பேரவை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் காந்திபுரம் பகுதியில் இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

கோவை கோட்டத்திற்கு புதிதாக 140 பேருந்துகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் கோவை மண்டலத்திற்கு 42 பேருந்துகளும், ஊட்டி மண்டலத்திற்கு 19 பேருந்துகளும், திருப்பூர் மண்டலத்திற்கு 41 பேருந்துகளும், ஈரோடு மண்டலத்திற்கு 38 பேருந்துகளும் அடங்கும்.

காந்திபுரம் நகர பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், தெற்கு தொகுதி எம்.எல்.ஏ அம்மன்.அர்ஜூனன், மேட்டுப்பாளையம் தொகுதி எம்.எல்.ஏ சின்னராஜ், கவுண்டம்பாளையம் தொகுதி எம்.எல்.ஏ ஆறுகுட்டி, வடக்கு தொகுதி எம்.எல்.ஏ அருண்குமார் மற்றும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
நாளை நடைபெறுவதாக இருந்த இந்நிகழ்ச்சி, பொங்கல் பண்டிகைக்கு பேருந்துகள் பற்றாக்குறையை போக்கத் துரிதகதியில் இன்றே நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.