கோவை : அம்மா இருசக்கர வாகனத்திட்டத்தின் கீழ் மானியத்துடன் கூடிய வாகனம் பெற தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என கோவை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
கோவை : அம்மா இருசக்கர வாகனத்திட்டத்தின் கீழ் மானியத்துடன் கூடிய வாகனம் பெற தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என கோவை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
கோவையில் பணிபுரியும் மகளிருக்கான அம்மா இருசக்கர வாகனத்திட்டத்தின் கீழ் மானியத்துடன் கூடிய வாகனம் பெற தகுதியானவர்கள் ஜனவரி 8 -ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என கோவை மாவட்ட ஆட்சியர் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது :- இத்திட்டத்தின் படி, 50 % மானியம் அல்லது ரூ.25 ஆயிரம் மானியமாக வழங்கப்படுகிறது. இந்த வாகனங்கள் அமைப்பு மற்றும் அமைப்பு சாரா நிறுவனங்களில் பதிவு செய்த பெண்கள், அரசு திட்டங்களில் பணியாற்றும் பெண்கள், தனியார் நிறுவனங்கள், அரசு உதவி பெறும் நிறுவனங்கள் மற்றும் கிராமப்புறங்களில் விவசாயம் மற்றும் விவசாயம் சாராத துறைகளில் சுயதொழில் செய்யும் உழைக்கும் மகளிருக்கு வழங்கப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தின் கீழ் 18 முதல் 40 வயது வரையில் ஓட்டுநர் உரிமம் வைத்துள்ள , ஆண்டுக்கு ரூ.2.5 இலட்சத்துக்குள் வருமானம் ஈட்டக் கூடிய பெண்கள் விண்ணப்பிக்கலாம். இதில் குறிப்பாக மிகவும் பின்தங்கிய பகுதிகள், மலைப்பகுதியில் வாழும் பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், கணவனை இழந்தோர், 35 வயதைக் கடந்தும் திருமணம் செய்து கொள்ளாத பெண்கள்,சமூகத்தில் விளிம்பு நிலையில் உள்ள பெண்கள் மற்றும் தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யும் டி.வி.எஸ் மற்றும் யமகா நிறுவனங்களின் வாகனங்களைக் கொள்முதல் செய்ய விரும்புபவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
இதனுடைய விண்ணப்பங்கள் எந்த கட்டணங்கள் பெறப்படாமல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள், பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சி அலுவலகங்கள், மாநகராட்சி மண்டல அலுவலகங்களில் கிடைக்கும். இதனைக் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை பெற்றுக் கொள்ளலாம். விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து சமர்ப்பிக்க ஜனவரி 18 -ம் தேதி கடைசியாகும்.
இதனுடன் வயதிற்கான சான்றிதழ், ஓட்டுநர் உரிமம் , இருப்பிட சான்றிதழ் (ஆதார்,வாக்காளர் அட்டை இவைகளில் ஏதேனும் ஒன்று), வேலையின் தன்மைச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ் (வேலை அளிப்பவரிடமிருந்து பெற வேண்டும்), சுய தொழில் புரிவோர் அதற்கான சுய வருமான சான்றிதழ், கல்வி சான்றிதழ் (8 -ம் வகுப்பு வரை படித்திருக்க வேண்டும்), புகைப்படம், சாதிச்சான்றிதழ் (தாழ்த்தப்பட்ட/ பழங்குடியினராக இருந்தால் மட்டும்) உள்ளிடவற்றை இணைத்து விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க வேண்டும். கடந்த வருடம் விண்ணப்பித்தவர்கள் தற்போது விண்ணப்பிக்க வேண்டியதில்லை. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.