கோவை : ரஜினியின் பேட்ட மற்றும் அஜித்தின் விஸ்வாசம் பட பேனர்களை ரசிகர்கள் கிழித்ததால் ஏற்பட்ட பரபரப்பை தடுக்கக் காவல்துறையினர் ரசிகர்கள் மீது தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.
கோவை : ரஜினியின் பேட்ட மற்றும் அஜித்தின் விஸ்வாசம் பட பேனர்களை ரசிகர்கள் கிழித்ததால் ஏற்பட்ட பரபரப்பை தடுக்கக் காவல்துறையினர் ரசிகர்கள் மீது தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இன்றைய தினம் ரஜினிகாந்த் நடித்த பேட்ட திரைப்படமும், அஜித்குமார் நடித்த விஸ்வாசம் திரைப்படமும் வெளியாகியுள்ளது. கோவையில் இந்த இருபடங்களும் தலா 10 -க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் திரையிடப்பட்டுள்ளது. அர்ச்சனா, தர்ச்சனா திரையரங்குகளில் வெளியிடப்பட்டுள்ள விஸ்வாசம் திரைப்படத்தைக் காண காலை 4 மணி முதலே அஜித் ரசிகர்கள் திரையரங்க முன்பு குவிந்தனர்.
இதையடுத்து, அஜித் ரசிகர்கள் கட் அவுட்டுக்கு மாலையிட்டு பாலாபிஷேகம் செய்ததொடு பட்டாசு வெடித்தும் மகிழ்ச்சியுடன் படத்தைக் காண சென்றுள்ளனர். அதே போலவே, பேட்ட திரைப்படம் காலை 6 மணிக்கு முதல் காட்சி தொடங்கியது. இரண்டு பெரிய நடிகர்களின் படங்கள் ரீலிசாவதை முன்னிட்டு திரையரங்கங்கள் முன்பாக போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இதனிடையே, அர்ச்சனா திரையரங்கு முன்பு இருந்த பேட்டை பட பேனர்களையும், விஸ்வாசம் பட பேனர்களையும் ரசிகர்கள் கிழித்து கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து, அங்கு இருந்த போலீசார் அவர்களை ஒழுங்குபடுத்த முயன்றனர். இதனால், ஆத்திரமடைந்த ரசிகர்கள் காவல்துறை ஜீப்பின் கண்ணாடியை உடைத்தனர். இதனையடுத்து, போலீசார் ரசிகர்கள் மீது தடியடி நடத்திக் கூட்டத்தை கட்டுப்படுத்தினர்.