கோவை : கோவை மாவட்டம் ரத்தினபுரியைச் சேர்ந்த லேத் தொழிலாளி ஒருவர், பொங்கல் பரிசு தொகையை இன்னும் வாங்காத நிலையில், அதனைப் பெற்றுக் கொண்டதாக வந்த குறுஞ்செய்தியைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.
கோவை : கோவை மாவட்டம் ரத்தினபுரியைச் சேர்ந்த லேத் தொழிலாளி ஒருவர், பொங்கல் பரிசு தொகையை இன்னும் வாங்காத நிலையில், அதனைப் பெற்றுக் கொண்டதாக வந்த குறுஞ்செய்தியைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.
ரத்தினபுரி போஸ்ட் கண்ணப்பநகரைச் சேர்ந்தவர் செல்வராஜ் (40). லேத் தொழில் செய்து வரும் இவர், காமாட்சி நகரில் உள்ள ரேஷன் கடையில் அங்கமாக உள்ளார். இவரது எண்ணுக்கு கடந்த சில மாதங்களாகவே ரேஷன் பொருட்கள் வாங்குவது போன்ற குறுஞ்செய்தி வருகிறது. இப்படியிருக்க, தமிழக அரசு சார்பில் பொங்கல் பண்டிகையையொட்டி ரேஷன் கடைகளில் பொதுமக்களுக்கு ரூ. 1,000 வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், நேற்று மாலை செல்வராஜ் உடைய செல்போன் எண்ணுக்கு ஆயிரம் ரூபாயும், பொங்கல் பரிசும் பெற்றுக் கொண்டது போன்ற குறுஞ் செய்தி வந்துள்ளது.
இது தொடர்பாக சந்தேகம் அடைந்த செல்வராஜ் அவரது பெற்றோரிடம் விசாரித்துள்ளார். ஆனால், இதுவரை அவர்கள் வீட்டிலிருந்து ரேஷன் கடைக்கு சென்று பணம் பெறவில்லை என தெரியவந்தது. இதையடுத்து, அவர் அந்த குறுஞ்செய்தியில் வந்துள்ள புகார் எண்ணுக்கு அழைத்துள்ளார். ஆனால், அந்தப் புகார் எண் செயல்படவில்லை.
இந்த நிலையில், அதிர்ச்சி அடைந்த செல்வராஜ் இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் அளிக்கப் போவதாக தெரிவித்துள்ளார்.
மேலும் இதுகுறித்து செல்வராஜ் கூறும்போது :- கடந்த சில மாதங்களாகவே எனக்கு அடிக்கடி ரேஷன் கடைகளில் பொருட்களை வாங்கியது போன்ற மெசேஜ் வருகிறது. அதேபோல, நேற்று மாலை ஆயிரம் ரூபாய் பெற்றுக் கொண்டது போன்ற மெசேஜ் வந்தது. இது எப்படி நடக்கிறது..? எங்கிருந்து நடக்கிறது..? என்பது தெரியவில்லை. அதில் உள்ள தொடர்பு எண்ணுக்கு அழைத்தாலும் அழைப்பும் போவது கிடையாது. இதுதொடர்பாக அதிகாரிகளிடம் புகார் அளிக்கப் போகிறேன், என தெரிவித்தார்.