கோவை: வறுமைக் கோட்டிற்கு மேல் உள்ளவர்களுக்குப் பொங்கல் பரிசாக ஆயிரம் ரூபாய் வழங்கக்கூடாது என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கோவை: வறுமைக் கோட்டிற்கு மேல் உள்ளவர்களுக்குப் பொங்கல் பரிசாக ஆயிரம் ரூபாய் வழங்கக்கூடாது என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

பொங்கல் பரிசாக ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் வழக்கமாக வழங்கப்படும் அரசி, கரும்பு, சர்க்கரை மற்றும் ஏலக்காய் உடன், ரூ.1000 பரிசாக அளிக்கத் தமிழக அரசு முடிவு செய்தது. அதன்படி நேற்று (9 -ம் தேதி) முதல் பரிசு பொருட்கள் மற்றும் பணம் குடும்ப அட்டைகளுக்கு விநியோகிக்கப்பட்டு வருகிறது.
இதனை எதிர்த்து கோவையை சேர்ந்த டேனியல் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், கூறியிருந்ததாவது:- தமிழக அரசு, அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு வருமானம் உள்ளிட்ட எந்த ஒரு பாகுபாடின்றி, ரூ.1000-த்தை பொங்கல் பரிசாக வழங்குகிறது. ஏற்கனவே, கஜா புயலினால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் நிவாரண பணிகளை முடிக்காத நிலையிலும், அதற்கு மிகப்பெரிய நிதி தேவைப்படும் சூழ்நிலையிலும், இதுபோல பொதுமக்கள் அனைவருக்கும் ரொக்கப்பரிசு வழங்கினால், அது தேவையில்லாத நிதி சுமையை அரசுக்கு ஏற்படுத்தும்.
நலத்திட்டங்களை உருவாக்கி பொதுமக்களுக்கு மாநில அரசு வழங்கலாம். அதுகூட பொருளாதார நிலையின் அடிப்படையிலேயே உருவாக்க வேண்டும். அதற்காக அனைவருக்கும் ரூ.1,000 ரொக்கப்பரிசு வழங்குவது ஏற்க முடியாது, இவ்வாறு அந்த மனுவில் தெரிவித்திருந்தார்.
இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. மனு மீதான விசாரணையை நடத்திய நீதிபதிகள், அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.1000 வழங்கப்படுவது ஏன்? என கேள்வியெழுப்பியதுடன் வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ளவர்களைத் தவிர மற்றவர்களுக்கு பொங்கல் பரிசாக ரூ.1000 வழங்கக்கூடாது என்று உத்தரவிட்டனர்.

மேலும், வறுமைக்கோட்டுக்கு மேல் உள்ளவர்களுக்கு பொங்கல் பரிசில் ரொக்கப்பணம் வழங்க மட்டுமே தடை. அரிசி, கரும்பு உள்ளிட்ட பரிசு பொருட்களை வழங்கத் தடை ஏதும் இல்லை என்று தெரிவித்தனர். இதனால் வெள்ளை நிற ரேசன் அட்டைதாரர்களுக்கு ஆயிரம் ரூபாய் கிடைக்காது என்பது குறிப்பிடத்தக்கது.