கோவை : விபத்தில் சிக்கி பலியான ஆயுதப்படையை சேர்ந்த காவலரின் குடும்பத்திற்கு ஆக்ஸிஸ் வங்கி சார்பில் ரூ.30 லட்சம் இழப்பீட்டுத் தொகை மேற்கு மண்டல காவல்துறை தலைவர் பெரியய்யா முன்னிலையில் வழங்கப்பட்டது.
கோவை : விபத்தில் சிக்கி பலியான ஆயுதப்படையை சேர்ந்த காவலரின் குடும்பத்திற்கு ஆக்ஸிஸ் வங்கி சார்பில் ரூ.30 லட்சம் இழப்பீட்டுத் தொகை மேற்கு மண்டல காவல்துறை தலைவர் பெரியய்யா முன்னிலையில் வழங்கப்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்ட ஆயுதப்படை காவலராக பணிபுரிந்து வந்தவர் பெரியண்ணன் (29). இவருக்கு திருமணமாகி சுகந்தி என்ற மனைவியும் அதிக்ஷா இரண்டரை வயது பெண் குழந்தையும் உள்ளனர். ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த இவர் கடந்த 2011 -ம் ஆண்டு காவல் துறையில் பணியில் சேர்ந்தார்.
இந்நிலையில், கடந்த ஆண்டு ஜூலை மாதம் இரவு 8 மணியளவில் தர்மபுரி டவுனில் உள்ள தனது வீட்டில் இருந்து சொந்த வேலை காரணமாக இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது ரெட்டிபட்டி பஸ் நிலையம் அருகே டிராக்டர் மோதியதில், பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து, சிகிச்சை பலனின்றி பலியானார்.
இதனிடையே, இவர் ஆக்ஸிஸ் வங்கியில் காவலர் பணிக்கான சம்பள கணக்கை வைத்திருந்தார். ஆக்ஸிஸ் வங்கியானது சீருடை பணியாளர்களுக்கான சம்பள கணக்கிற்கு விபத்து காப்பீடாக ரூ.30 லட்சம் இலவசமாக வழங்கியுள்ளது. இந்த காசோலையை மேற்கு மண்டல காவல்துறைத் தலைவர் அலுவலகத்தில் வைத்து மறைந்த காவலரின் மனைவி சுகந்தி மற்றும் அவரது குடும்பத்தார் பெற்றுக்கொண்டனர்.

இந்த காசோலை வழங்கும் நிகழ்ச்சியில், மேற்கு மண்டல காவல்துறைத் தலைவர் பெரியய்யா ஐ.பி.எஸ், ஆக்ஸிஸ் வங்கியின் கோவை மண்டல தலைவர் சக்திவேல், காவல்துறை துணைத் தலைவர்கள் செந்தில்குமார் ஐ.பி.எஸ், கார்த்திகேயன் ஐபிஎஸ், கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாண்டியராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.