கோவை : கேரளாவில் இருந்து தங்கநகை மற்றும் வெள்ளிப் பொருட்களுடன் கோவை நோக்கி வந்து கொண்டிருந்த தங்க நகைக் கடைக்குச் சொந்தமான காரை மர்ம நபர்கள் வழிமறித்து, தங்கம் மற்றும் வெள்ளிப் பொருட்களை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை : கேரளாவில் இருந்து தங்கநகை மற்றும் வெள்ளிப் பொருட்களுடன் கோவை நோக்கி வந்து கொண்டிருந்த தங்க நகைக் கடைக்குச் சொந்தமான காரை மர்ம நபர்கள் வழிமறித்து, தங்கம் மற்றும் வெள்ளிப் பொருட்களை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் திருச்சூரில் உள்ள கல்யாண் ஜுவல்லரியிலிருந்து கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள கல்யாண் ஜூவல்லரிக்கு தங்கம் மற்றும் வெள்ளிப் பொருட்களை பணியாளர்கள் வியாபாரம் தொடர்பாக அடிக்கடி கொண்டு வருவது வழக்கம். இந்த நிலையில், இன்று வழக்கம்போல, திருச்சூரில் இருந்து கோவை காந்திபுரம் கல்யாண் ஜூவல்லரி நோக்கி கிட்டத்தட்ட 350 சவரன் தங்க நகையும், 243.320 கிராம் வெள்ளிப் பொருட்களையும் ஏற்றிக் கொண்டு வந்து கொண்டிருந்தனர். காக்காசாவடியில் உள்ள ஆர்யாஸ் ஹோட்டல் அருகே வரும்பொழுது ,திடீரென கல்யாண் ஜுவல்லரி பணியாளர்கள் வந்த காரின் பின்பகுதியில் இரண்டு கார்கள் மோதியது. பின்னர், அந்த இரண்டு காரில் இருந்து இறங்கி வந்த 10 பேர் கொண்ட கும்பல் கல்யாண் ஜுவல்லரி நிறுவனத்தின் கார் கண்ணாடியை உடைத்தனர்.

மேலும், காருக்குள் இருந்த திருச்சூரைச் சேர்ந்த அர்ஜீன் (22), மற்றும் வில்ப்ரட்டை (33) தாக்கிவிட்டு, காருக்குள் இருந்த தங்கநகைகள் மற்றும் வெள்ளிப் பொருட்களை பறித்துச் சென்றனர். கொள்ளையர்கள் கோவை வழியாக தப்பி சென்றுள்ளனர். பறிபோன நகைகளின் மதிப்பு ரூ. 92 லட்சம் வரை ஆகும் என கூறப்படுகிறது.

இந்த சம்பவம் குறித்து அறிந்து வந்த காக்காசாவடி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக குற்றவாளிகளை பிடிக்க போலீசார் சி.சி.டி.வி. கேமராக்களை கொண்டு ஆய்வு செய்து வருகின்றனர். அதேபோல, கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம் போன்ற பல்வேறு பகுதி போலீசார், குற்றவாளிகளைப் பிடிக்க தீவிரப்படுத்தப்பட்டுள்ளனர். அனைத்து சோதனை சாவடிகளும் உஷார்படுத்தப்பட்டுள்ளது. மேலும், வழிப்பறியில் ஈடுபட்ட கும்பலை பிடிக்க கோவை மாவட்ட போலிசார் 4 தனிப்படைகள் அமைத்து வலைவீசி தேடி வருகின்றனர்.